பக்கம்:கண் திறக்குமா.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

169

"அதற்கு மேல் என்னால் பத்திரிகை நடத்த முடியாது என்கிறீர்கள் - அப்படித்தானே? எது எப்படியிருந்தாலும் என்னைப் பொறுத்தவரை ஆத்ம திருப்தியாவது அடைய முடியுமல்லவா?"

"அதை உம்முடைய பணத்தைக் கொண்டுதானா அடைய வேண்டும்? என்னைப்போல் ஊரார் பணத்தைக் கொண்டு அடையக் கூடாதா? நான்தான் தேசபந்து நிதியிலிருந்து உமக்கு வேண்டியப் பணம் தருகிறேன் என்று சொல்கிறேன், ஏன் வேண்டாம் என்கிறீர்? இல்லையென் றால் சில பெரிய புள்ளிகள் செய்வது போல நீரும் ஒரு நாற்பதினாயிரம் காங்கிரஸ் அங்கத்தினர் ரசீதுகளையாவது திருட்டுத்தனமாக அச்சிட்டு விற்பனை செய்யுமே! - அப்படி ஏதாவது செய்து நீர் ஆத்ம திருப்தி அடைந்தால் உம்மை நம்பி வயிற்றைத் திருப்தி செய்து கொள்ள நினைப்பவர்களுக்கு உம்மால் எந்தவிதமான தொல்லையும் இராது. அதை விட்டு விட்டு வயதுக்கு வந்த ஒரு பெண்ணை வீட்டில் வைத்துக் கொண்டிருக்கும் நீர், அவளுக்கு ஆதரவாக இருந்த ஒரே ஒரு வீட்டையும் அடமானம் வைத்துவிட்டு ஆத்ம திருப்தி அடையப் போகிறேன் என்கிறீரே - இது தகுமா, முறையா, தருமந்தானா?" என்று வழக்கம்போல் அடுக்கிக்கொண்டே போனார் அவர். எனக்கும் அவர் கடைசியாகச் சொன்ன விஷயம் சரியென்றே பட்டது. அதன்படிச் சித்ராவின் கல்யாணத்தை முதலில் நடத்தி முடித்துவிட்டு, அதற்குப் பின் பத்திரிகைத் தொழிலில் இறங்குவதென்று தீர்மானித்தேன்; அதற்கு வேண்டிய முயற்சிகளையும் அன்றே எடுத்துக் கொண்டேன்.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/172&oldid=1379600" இலிருந்து மீள்விக்கப்பட்டது