பக்கம்:கண் திறக்குமா.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

181

"நான் மட்டும் உணர்ந்தால் போதுமா? மக்கள் உணர வேண்டாமா? அவர்களிடமும் நீங்கள் இந்த உண்மையை ஒப்புக்கொண்டு விடலாமே?"

"என்னைப் பொறுத்தவரை நான் அதற்குத் தயாராய்த் தான் இருக்கிறேன். ஆனால் உண்மையைச் சொன்னால் அவர்கள் என்னை நம்பமாட்டார்களே. பரம்பரை பரம்பரையாகப் பொய்யையே நம்பி அவர்களுக்குப் பழக்கமாய்ப் போய்விட்டதே!"

"அதற்காக நாமும் பொய்யே பேசவேண்டுமா, என்ன ?"

"அரசியல் உலகத்தில் பொய் பேசாமல் யாரும் வெற்றியடைந்து விடமுடியாது. உதாரணத்துக்கு இந்தச் சிறை வாழ்க்கையைத்தான் எடுத்துக் கொள்வோமே! இங்குள்ள கஷ்ட நஷ்டங்களைப் பற்றி வெளியே பல தேசபக்தர்கள் கண்ணீரும் கம்பலையுமாகக் கரடி விடுவதை நான் காதாரக் கேட்டிருக்கிறேன். இங்கே வந்து பார்த்தால் அப்படியொன்றும் இது மோசமானதாகத் தெரியவில்லை. முதன்முதலாகச் சிறைக்கு வந்திருக்கும் எனக்கே இப்படித் தோன்றுகிறதென்றால், உம்மைப் போல் பலமுறை வந்தவர்களுக்கு இதில் ஒன்றும் கஷ்டமே தோன்றாது. ஏதோ ஒரு காலத்தில் சிறையில் கஷ்ட நஷ்டங்கள் இருந்திருக்கலாம்; இப்பொழுது அப்படியொன்றையும் காணோம். இன்னும் சொல்லப்போனால் ஏழைபங்காளர்கள் என்று சொல்லிக்கொண்டு இங்கே வருபவர்கள், இந்த அற்ப சொற்பமான கஷ்டத்தைக்கூட அனுபவிக்கவில்லையென்றால் அதில் அர்த்தமேயில்லை. ஆயினும் அவர்கள் ஏன் அப்படிக் கரடி விடுகிறார்கள்? பொது மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக ஐயா, பெறுவதற்காக!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/184&oldid=1378759" இலிருந்து மீள்விக்கப்பட்டது