பக்கம்:கண் திறக்குமா.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

185

நான் பொறுமையிழந்து, "போதும், நிறுத்துங்கள்!" என்று கத்தினேன்; 'கலகல'வென்று நகைத்துக்கொண்டே அவர் வெளியே போய்விட்டார்.



றுநாள் சாந்தினி வந்தாள், "என்னைப் பார்ப்பதற்காக இல்லை; செல்வத்தைப் பார்ப்பதற்காக?" என்றார் பாரிஸ்டர் பரந்தாமன்.

"இருவரையுந்தான்!" என்றாள் அவள். அடுத்தாற்போல் அப்பா 'ஏ' வகுப்புக் கைதியாகவும், நான் 'பி' வகுப்புக் கைதியாகவும் இருந்தது அவள் கவனத்தைக் கவர்ந்தது. "எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் இனம் என்று வெளியே பிரசாரம் செய்கிறீர்களே, அந்தப் பிரசாரத்தை இங்கு ஏன் ஆரம்பிக்கவில்லை ?" என்றாள் அவள் சிரித்துக்கொண்டே.

"அது வேறு விஷயம், இது வேறு விஷயம்" என்றேன் நான்.

"அதெல்லாம் ஒன்றுமில்லை, வெளியே சமதர்மப் பிரசாரம் செய்தால் அது சொந்த விஷயத்தைப் பாதிக்காது; இங்கே செய்தால் பாதிக்கும்!" என்றார் பரந்தாமனார் குறுக்கிட்டு.

இதைக் கேட்டதும் எனக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்துவிட்டது. "அப்படியானால் உயிரைத் துச்சமாக மதித்துப் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தோடு போராடும் நம் அருமைத் தலைவர்கள்கூடவா சுயநலத்தைக் கருதிச் சிறைக்குள் சமதர்மம் பேசாமல் இருக்கிறார்கள்?" என்று கன்னத்தில் அறைந்தாற்போல் கேட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/188&oldid=1378745" இலிருந்து மீள்விக்கப்பட்டது