பக்கம்:கண் திறக்குமா.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

199

எதிர்பாராமலே உதவி செய்ய வேறு யாராவது முன் வருவார்களா, என்ன?

அதற்கேற்றாற்போல் பாரிஸ்டர் பரந்தாமனை நண்பராகப் பெற்றிருந்த எனக்கு, பாடம் சொல்லிக் கொடுக்க நான்கு பெரிய மனிதர் வீடுகள் கிடைப்பதில் சிரமம் ஒன்றும் ஏற்படவில்லை. எனவே, உற்சாகத்துடன் நான் அந்தத் தொழிலில் இறங்கிக் கவலையின்றிக் காலத்தைக் கழித்து வந்தேன்.

ஒரு நாள் செங்கமலத்தின் தாயார் தன் பேரனை அழைத்துக் கொண்டு என்னைத் தேடி வந்தாள். அவளை வரவேற்று, "என்ன விஷயம்?" என்று விசாரித்தேன்.

"இந்த மாதம் பிறந்தால் இவனுக்கு வயது ஐந்தாகிறது; ஏதாவது ஒரு பள்ளிக்கூடத்தில் இவனைச் சேர்த்துவிட்டால் தேவலை!" என்றாள் அவள்.

"அதற்கென்ன, சேர்த்துவிட்டால் போச்சு!" என்று சொல்லிவிட்டு,"ஏண்டா, உன் பெயர் என்ன?" என்று நான் அவனைக் கேட்டேன்.

"சிவகுமார்!" என்றான் அவன்.

"அடி, சக்கை ! அம்மாவின் பெயர்?"

"செங்கமலம்!"

"எங்கே உன் மாமா?"

அதற்குள் அவன் பாட்டி குறுக்கிட்டு, "அந்த வயிற்றெரிச்சலை ஏன் கேட்கிறீர்கள்? அவன் தான் வீணாய் போய்விட்டானே!" என்றாள் வருத்தத்துடன்.

"ஏன், அவன் வீட்டுக்கு வருவதில்லையா?"

"எங்கே வருகிறான், வந்தாலும் எங்கே நிற்கிறான்? ஏதோ முணுமுணுத்துக் கொண்டே வருகிறான். ஏதோ முணுமுணுத்துக்கொண்டே போகிறான்!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/202&oldid=1378705" இலிருந்து மீள்விக்கப்பட்டது