பக்கம்:கண் திறக்குமா.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

கண் திறக்குமா?

இருந்திருக்க வேண்டும். அதற்காகத்தானோ என்னவோ, “உஸ்... ஸைலன்ஸ்!” என்றுவேறு அவர்கள் அடிக்கடி உதட்டின்மேல் விரலை வைத்துக் கூறிக்கொண்டிருந்தனர்.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது அந்தப் ‘பெண் தெய்வங்க’ளின்மேல் எனக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது. அவர்கள் அத்தனை பேரையும் நையப் புடைத்து, அவர்களையும் எங்களைப்போலவே அலறவைத்து, “உஸ், ஸைலன்ஸ்!” என்று நாமும் உதட்டின்மேல் விரலை வைத்துச் சொன்னால் என்ன என்று கூடத் தோன்றிற்று!

ஏனெனில் தங்களுக்குமேல் உயர்ந்த பதவி வகிக்கும் டாக்டர்களுக்குக்கூட அவர்கள் கொஞ்சமாவது அஞ்சியதாகத் தெரியவில்லை. அந்த டாக்டர்களும் தங்கள் கடமையை அவ்வளவு தூரம் உணர்ந்தவர்களாகத் தெரியவில்லை. பரஸ்பரம் பல்லை இளிப்பதன் மூலம் அவர்களில் பலர் தாங்கள் இருப்பது ஆஸ்பத்திரி என்பதையே அடியோடு மறந்துவிட்டிருந்தனர். தங்களுடைய நேரத்தில் ஒரு நோயாளிக்காகச் செலவழிப்பது ஒரு நிமிஷம் என்றால், ஒரு நர்சுடன் பேசுவதற்கு அவர்கள் ஒரு மணி நேரம் வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராயிருந்தனர்!

இவை மட்டுமல்ல; இன்னொரு காட்சியும் என்னைத் திகைக்க வைத்தது. எத்தனையோ பேருடைய வேதனையைக் கொஞ்சங்கூடக் கவனிக்காமலிருந்த டாக்டர்களும் நர்சுகளும், ஒரு சிலரை மட்டும் விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டிருந்தனர். அவர்களில் யாராவது ஒருவர் ‘உம்’ என்றால் போதும், ஓடோடியும் வருவார்கள். அந்த மனிதரோ அவர்களை ஆச்சரியத்துடன் பார்ப்பார். “என்னவேணும், உங்களுக்கு?” என்று அவர்கள் ஒருவர் பின் ஒருவராகக் கேட்பார்கள். அந்த மனிதருக்கு என்ன சொல்வதென்றே புரியாது; “ஒன்றுமில்லையே!” என்று திரும்பிப் படுத்துக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/29&oldid=1381870" இலிருந்து மீள்விக்கப்பட்டது