பக்கம்:கண் திறக்குமா.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

கண் திறக்குமா?

சமூகத்துக்கு முன்னால் அவ்வாறு வாழ வகையில்லாதவள்; கூனோ குருடோ, செவிடோ ஊமையோ, தனக்குப் பிடித்தவனோ பிடிக்காதவனோ - யாரோ ஓர் அனாமதேயத்தின் சுயநலத்துக்காகத் தன்னை அர்ப்பணம் செய்வதற்கென இந்தப் பாழும் உலகத்தில் பிறந்தவள். அதிலும் குறிப்பிட்ட வயதிற்குள் அந்தக் கதிக்கு ஆளாகி விட வேண்டுமென்று சமூகத்தினரால் நிர்ப்பந்திக்கப்படுகிறவள்; தன் வாழ்க்கைத் துணையைத் தானே தேடிக் கொள்வதற்குச் சுதந்திரமில்லாதவள்; தன்னுடைய நல்வாழ்வுக்குத் தன் அண்ணன் ஒருவனையே நம்பி இருந்தவள் - இனி என்ன செய்வாள்?

நாம் திரும்பி வரும் வரை அவள் தன்னந் தனியாக வாழ்வதற்குச் சமூகம் அனுமதிக்குமா? - இல்லை, ஓய்வு கிடைத்தபோதெல்லாம் அவளைப் பற்றி ஏதாவது விதவிதமான கதை கட்டி விடுவதையே தன் பொழுதுபோக்காகக் கொண்டிருக்குமா?

சாந்தினி - ஆம், சாந்தினி! - அந்தப் பெயரில் தான் எவ்வளவு அமைதி நிலவுகிறது! அந்த அமைதி, இனி அவளை நினைக்கும்போது நம் உள்ளத்தில் நிலவுமா? இல்லை, நம்மை நினைக்கும்போது அவள் உள்ளத்தில்தான் அத்தகைய அமைதியை எதிர்பார்க்க முடியுமா?

இப்படியெல்லாம் என் மனம் என்னவெல்லாமோ எண்ணியெண்ணி அலைபாய்ந்தது. இத்தனைக்கும் பொது வாழ்வில் ஈடுபட்டுப் பல பயங்கரமான கொடுமைகளுக்கு ஆளான எத்தனையோ தேச பக்தர்களைப் பற்றி நானும் உங்களைப்போலப் படித்துத்தான் இருந்தேன். அம்மாதிரி கொடுமைகளுக்கு ஆளாகும் போது கூட அவர்களுடைய முகம் மலர்ந்தே இருக்குமாம்!

இந்த இடத்தில் தயவு செய்து நீங்கள் என்னை மன்னித்துவிட வேண்டும். ஏனெனில், அடியேன் முகம் அவ்வாறு மலரவில்லை. காரணம், இயற்கை மனிதனான நான், செயற்கைத் தேவனாக முடியாமல் இருந்ததே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/51&oldid=1379107" இலிருந்து மீள்விக்கப்பட்டது