பக்கம்:கண் திறக்குமா.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

53

கிடையாது; அதை அவர் அறவே வெறுப்பவர்’ என்று அவர்கள் நம்மைப் பற்றிச் சொன்னாலும் பாதகமில்லை - அதிலும் புகழ் அந்தரங்கமாகப் பரவித்தானே கிடக்கிறது? - அப்புறம் நாலு பத்திரிகைக்காரர்களின் தயவை நாடவேண்டியது. சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் அவர்கள் நமக்கு ‘இந்திரன்’ ‘சந்திரன்’ என்ற புகழ் மாலைகளைச் சூட்டிக் கொண்டே இருக்க வேண்டியது - அப்படி அவர்கள் செய்யாமற் போனாலும் பாதகமில்லை; நாமே நாலு பத்திரிகைகளை ஆரம்பித்து நடத்தலாம்...”

“பொதுமக்கள் அவற்றை ஆதரிக்க வேண்டாமா?”

“ஆதரிக்காமல் என்ன ஐயா! நான்தான் சொல்லி விட்டேனே. அவர்கள் எப்படி வேண்டுமானாலும் வளைந்து கொடுக்கக் கூடியவர்கள் என்று. ஆனால் ஒன்று. உண்மையை மட்டும் அவர்களுக்கு எடுத்துச் சொல்லக்கூடாது. அப்படிச் சொன்னால் நம்மை அவர்கள் கொஞ்சங்கூட நம்பமாட்டார்கள். அவர்கள் போகிற போக்கிலேயே நாமும் போய்க் கொண்டிருந்தால் நமக்கு ஒரு கஷ்டமும் இல்லை; அதிலிருந்து அவர்களைத் திருப்ப முயன்றால்தான் ஆபத்து, ஏதோ இருக்கிறவரை விரும்பிய விதமே வாழ்ந்து, செத்துப் போனாலும் அமரனாயிருக்க வேண்டுமென்றால் அதற்கு நான் சொல்வதுதான் சிறந்த வழி!”

“உங்களைப் போன்றவர்கள் இருந்தால் தேசம் உருப்பட்ட மாதிரிதான்!”

இவ்வாறு சொன்னதும் அவர் என்னை அனுதாபத்துடன் பார்த்தார்; நான் அவரை ஆத்திரத்துடன் பார்த்தேன்.

அதற்குள் மாலை மணி ஆறு அடித்து விடவே, என்னை வழக்கம்போல் தனி கொட்டடியில் தள்ளிப் பூட்டிவிட்டார்கள். அவ்வளவுதான்; சகோதர தேசபக்தர்களுடன் அன்றைய தினம் நடத்திய காரசாரமான பேச்சு வார்த்தைகளெல்லாம் என் மனத்தை விட்டு அகன்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/56&oldid=1379144" இலிருந்து மீள்விக்கப்பட்டது