பக்கம்:கண் திறக்குமா.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

கண் திறக்குமா?

அருகே உட்காரும்படி சமிக்ஞை காட்டுகிறார்கள். சித்ரா உட்கார்ந்ததும் தலையைக் கோதி விட்டுவிட்டு அவளுடைய வாயைப் பொத்துகிறார்கள்.

இந்தச் சமயத்தில் ‘டாக்ஸி’ ஒன்று வந்து எங்கள் வீட்டு வாசலில் நிற்கிறது. அதிலிருந்து ஒரு பெரிய மனிதர் இறங்கி வருகிறார். அவரைத் தொடர்ந்து ஜவ்வாது வாசனை வந்து ‘கட்டியம்’ கூறுகிறது - அறையில் பஞ்சகச்சம், மேலே சட்டை, அதற்கு மேலே கோட்டு, அதற்கும் மேலே ஜரிகைக்கரை மேலாடை - அது தரையைத் தொட்டுக் கொண்டிருக்கிறது!

தலையில் தலைப்பாகை, காதுகளில் வைரக் கடுக்கன்கள், மார்பில் கோட்டுப் பித்தானுக்கும் பைக்குமாகத் தொங்கிக் கொண்டிருக்கும் தங்கக் கடிகாரச் சங்கிலி, நெற்றியில் சந்தனப் பொட்டு - ஆகியவற்றுடன் இரு புறமும் அழகாக மீசையை முறுக்கி விட்டுக் கொண்டிருக்கும் அவர், கையில் அவசியமில்லாத தடியுடன் ஒரு தினுசாக உள்ளே வந்துகொண்டிருக்கிறார்.

அவர் வேறு யாருமல்ல; என் அம்மான் - அதாவது, என் தாயின் ஒரே சகோதரன். அந்தக் காலத்தில் தஞ்சை குற்றாலலிங்கம் என்றால் யாருக்கும் சாதாரணமாகத் தெரியும். அவர் பரம்பரைப் பணக்காரர் மட்டும் அல்ல; பிரபல மிராசுதாருங்கூட.

அவரைத்தான் என்னுடைய தாயார் அத்தனை நேரமும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் போலிருக்கிறது. ஆனால் அந்த நிலையில் அவர்களைப் பார்த்து அவருடைய முகம் மட்டும் வாடவில்லை!

தம்மைக் கொஞ்சம் தூக்கி உட்கார வைக்கும்படி அம்மா எங்களுக்குச் சமிக்ஞை செய்கிறார்கள்; நாங்களும் அவ்வாறே செய்கிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/63&oldid=1379059" இலிருந்து மீள்விக்கப்பட்டது