பக்கம்:கண் திறக்குமா.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

61

“என்ன அக்கா, என்ன உடம்புக்கு?” என்று சம்பிரதாயத்தை யொட்டி விசாரிக்கிறார் அவர்.

அம்மாவால் பதில் சொல்ல முடியவில்லை. அவர்களுக்குப் பதிலாக, “எல்லாம் இந்தப் புண்ணியவானால் வந்தது!” என்று என்னைச் சுட்டிக் காட்டி ஆரம்பிக்கிறாள் சித்ரா. நான் தலையைக் கீழே தொங்கவிட்டுக் கொள்கிறேன்.

“ஏன், இவன் என்ன செய்தான்?” என்று கேட்கிறார் அவர்.

“பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைக் கவிழ்ப்பதற்காக இவர் சிறைக்குப் போனார்; அன்றைய தினத்திலிருந்து அம்மா இப்படிப் படுத்துவிட்டார்கள்.”

“என்ன, இருக்கிற காங்கிரஸ்காரப் பயல்கள் இருந்து ஊரைக் கெடுப்பது போதாதென்று இவனும் காங்கிரஸ்காரனாகி விட்டானா? - அப்பப்பா, இப்பொழுதெல்லாம் எங்கே பார்த்தாலும் இந்தத் தொல்லைதான்! அதற்கு முன்னெல்லாம் கிராமங்களில் வார்க்கிற கூழை வார்த்துக் கொடுக்கிற காசைக் கொடுத்தா எத்தனையோ நாய்கள், கழுதைகளாய் வந்து உழைக்கும். இப்பொழு தென்னடாவென்றால் நிலமே எனக்குத்தாண்டா சொந்தம், உனக்குச் சொந்தமில்லை, என்று பேச ஆரம்பித்து விட்டார்கள். எல்லாம் இந்தப் பயல்களாலே வந்ததுதான்! சரி சரி, அப்போதே நான் சொன்னேன்: பட்டணத்திலேயிருந்தால் இந்தத் தட்டிக் கேட்க ஆளில்லாத பிள்ளை சரிப்பட்டு வராது, நீ பேசாமல் என்னுடன் வந்துவிடு என்று - கேட்டால்தானே? - படட்டும், படட்டும்!” என்கிறார் அவர்.

அம்மா மெளனமாக அவருடைய கரத்தைப் பற்றுகிறார்கள்; அதில் என்னுடைய கையையும் சித்ராவின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/64&oldid=1379069" இலிருந்து மீள்விக்கப்பட்டது