பக்கம்:கண் திறக்குமா.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

கண் திறக்குமா?

கையையும் சேர்த்து வைத்து மூடுகிறார்கள் - அத்துடன் தம் கண்களையும் மூடிக்கொண்டு விடுகிறார்கள்.

அவ்வளவு தான்; “அம்மா, அம்மா!” என்று அலறிக் கொண்டே எழுந்து நான் வெளியே வந்தேன்.

“என்ன, அண்ணா?” என்று கேட்டுக் கொண்டே எனக்கு எதிரே வந்து நின்றாள் சித்ரா.

எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. அதுகூட ஒரு வேளை கனவோ என்று எண்ணிக் கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டு பார்த்தேன் - சந்தேகமேயில்லை; எனக்கு எதிரே வந்து நின்றவள் சித்ராவேதான்!

என்னுடைய சிறைக் கோலத்தைக் கண்டு அவளுடைய கண்கள் கலங்கின. “இது என்ன கோலம்! இப்படியும் உங்கள் புத்தி போகுமா? எவ்வளவோ அழகாக வாழ்க்கை நடத்தவேண்டிய நீங்கள் இப்படிக் குட்டிச் சுவராய்ப் போய்விட்டீர்களே?” என்றாள் அவள்.

“அதுகிடக்கட்டும்; அம்மா எப்படியிருக்கிறார்கள்?”

வேறு எப்படியிருப்பார்கள்? - நாளை எண்ணிக் கொண்டுதான் இருக்கிறார்கள்! - நீங்கள் பரோலிலாவது வந்து அவர்களை ஒரு முறை பார்த்துவிட்டு வரக் கூடாதா?”

“உனக்கு முன்னால் நானே கேட்டுப் பார்த்தேன்; விடமாட்டேன் என்கிறார்கள்!”

“அதற்காக நீங்கள் அம்மாவைப் பார்க்காமலே இருந்துவிடப் போகிறீர்களா? - சொல்வதைக் கேளுங்கள், அண்ணா! - அவர்களை நீங்கள் இன்னொரு முறை பார்க்கப் போவதில்லை; அம்மாவுக்கும் அது தெரிந்து விட்டது. அதனால்தான் தஞ்சைக்குத் தந்தி கொடுத்துத் தம்பியை உடனே வரவழைக்கச் சொன்னார்கள். அவரும் வந்தார். இல்லையென்றால் அவர்களைத் தனியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/65&oldid=1379086" இலிருந்து மீள்விக்கப்பட்டது