பக்கம்:கண் திறக்குமா.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

83

ன்றிரவும் எனக்குத் துக்கம் பிடிக்கவில்லை என்று சொல்லவாவேண்டும்? - மனமே ஒரு நிலையில் நிற்கவில்லை; அங்கேயும் இங்கேயுமாக அது அலைந்து கொண்டே இருந்தது. அத்துடன், என்றுமில்லாத அதிசயமாக அன்று உலகமே எனக்குப் புத்தம் புதிதாகத் தோன்றியது.

ஆம், சிறைக்குள்ளிருந்த போது நான் சிலரிடமிருந்து கேட்டறிந்த விஷயங்களும், அன்று மாலை பரந்தாமனார் வெளியிட்ட சில விவரங்களுந்தான் அதற்குக் காரணமாயிருக்க வேண்டும்.

அவற்றையெல்லாம் ஒன்று சேர்த்து எண்ணிப் பார்க்கும்போது, “நாம் இதுவரை உலகமே இன்னதென்று தெரியாமல் இருந்து விட்டோமோ?” என்ற சந்தேகங்கூட எனக்கு எழுந்ததென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

இதற்கிடையே சித்ராவின் நினைவு வேறு - நாளைக்காவது தஞ்சைக்குப் போய் அவளைப் பார்க்க வேண்டாமா? - பார்க்கத்தான் வேண்டும் - ஆனால் அதற்குக் குறைந்த பட்சம் பத்து ரூபாய்களாவது வேண்டுமே, என்ன செய்வது?

பாரிஸ்டர் பரந்தாமனைக் கேட்கலாமென்றால் அதற்கு மனம் இடங் கொடுக்கவில்லை - சாந்தினி - அவளைக் கேட்டால் என்ன? - பின்னால் திருப்பிக் கொடுத்து விட்டால் போகிறது!

சீ, அவளையும்தான் எப்படி மனம் விட்டுக் கேட்பது? அவளாகவே நம் நிலைமையை உணர்ந்து ஏதாவது கொடுத்தால் நன்றாயிருக்கும் - அப்படியும் நடக்குமா?

என்ன இருந்தாலும் படித்த பெண் - ஏன் நடக்காது? அதுசரி, நாம் ஏன் இந்த நிலைக்கு வந்தோம்? - ரொம்ப அழகுதான்! - அதைப்பற்றி இப்போது யோசித்து என்ன பயன்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/86&oldid=1378737" இலிருந்து மீள்விக்கப்பட்டது