பக்கம்:கண் திறக்குமா.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

85

“அதெல்லாம் ஒன்றுமில்லை; கண்கள் தூங்க விரும்பி னாலும் மனம் எங்கே தூங்கவிடுகிறது?” என்றேன் நான்.

“இன்று மாலை ஒரு பெரிய வரவேற்பு விழாவுக்கு ஏற்பாடு செய்வதென்று தீர்மானித்திருக்கிறேன்!” என்று ஆரம்பித்தார் அவர்.

“யாருக்கு வரவேற்பு?” என்றேன் நான். ‘'சரியாய்ப் போச்சு! உனக்குத்தான் ஐயா, உனக்குத்தான்!’

“என்னைத்தான் நேற்றே வரவேற்று விட்டீர்களே?”

“நான் மட்டும் வரவேற்றுவிட்டால் போதுமா? பொது மக்கள் திரண்டு வந்து உன்னை வரவேற்க வேண்டாமா?”

“அவ்வளவு தூரத்துக்கு நான் ‘பெரிய மனித’னா, என்ன!”

“அது எப்படியிருப்பான், பெரிய மனிதன்?”

“அறிவிலும் ஆற்றலிலும், வீரத்திலும் தீரத்திலும், தியாகத்திலும் சீலத்திலும் சிறந்தவனாயிருப்பான்!”

“சரி, அவற்றில் ஒன்றுமே உன்னிடம் இல்லையா?”

“என்னிடம் என்ன இருக்கிறது; நான் நேற்று முளைத்தவன்தானே?”

“ச்சூச்சூ! - இப்படி நினைத்து நினைத்துத்தான் நம்மவர்கள் குட்டிச்சுவராய்ப் போகிறார்கள் - என்னைக் கேட்டால் பெரிய மனிதனாவதற்கு நீ சொல்வதில் ஒன்றுமே இருக்க வேண்டாம் என்று சொல்வேன்.”

“வேறு என்ன இருக்க வேண்டுமாம்?”

“அப்படி வா, வழிக்கு! - பெரிய மனிதர்கள் என்றால் நாலு பேருக்குத் தெரிந்து அங்குமிங்குமாக நடமாடிக் கொண்டிருக்கக் கூடாது - கூடியிவரை நடமாட்டத்தைக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/88&oldid=1378834" இலிருந்து மீள்விக்கப்பட்டது