பக்கம்:கண் திறக்குமா.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அதன் விளைவே ‘கல்கி'யில் தொடர்ந்து வெளியாகி, உங்கள் உள்ளத்தைப் பெரிதுங்கவர்ந்த ‘பாலும் பாவையு'மாகும்.

இத்தகைய புயலுக்கும் பூகம்பத்துக்கும் என்னை உள்ளாக்கி, நண்பர் திரு. முருகு சுப்பிரமணியம் அவர்களை ‘பொன்னி’ வாசகர்களிடம் திண்டாட வைத்த கதையே ‘கண் திறக்குமா?’ கதை; அதற்காக நான் எடுத்த அவதாரமே ‘நக்கீரன்’ அவதாரம்!

ஏன் எடுத்தேன்? காலமெல்லாம் என்னைத் தொழுது, கடைசியில் இரணியன் கையிலோ முதலையின் வாயிலோ சிக்கிக்கொண்ட பக்தனைக் காப்பாற்றவா? இல்லை, என்னை நானே காப்பாற்றிக் கொள்ளத்தான்!

வாழ்வதற்காக வயிறு செய்யத் தூண்டும் எத்தனையோ தவறுகளில் அதையும் ஒன்றாகப்பாவித்து என்னை அன்று மன்னித்துவிட்ட ஆசிரியர் கல்கி அவர்களோ இன்று அமரராகிவிட்டார்; அந்தத் தவறைத்தாம் செய்த தவறாகக் கருதி இன்னல் பலவற்றுக்கு உள்ளான திரு. முருகு சுப்பிரமணியம் அவர்களோ இன்று தமிழ்ப் பெருமக்களால் நாடு கடத்தப்பட்டு விட்டார்! - ஆம், அவர்களுக்காக அசல் தமிழ்ப்பத்திரிகையொன்றை நடத்தியதே அவர் செய்த குற்றம் - அதற்காகவே இன்று அவர் மலேயாவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்!

இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பின் நூல் வடிவம் பெற்று வரும் இக்கதை, என்னை இன்னும் என்ன பாடுபடுத்தப் போகிறதோ, தெரியவில்லை!

1.4.1956

அன்பு

சென்னை

விந்தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/9&oldid=1379415" இலிருந்து மீள்விக்கப்பட்டது