பக்கம்:கண் திறக்குமா.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

கண் திறக்குமா?

ஆனால் இதற்கெல்லாம் முதலில் வேண்டியது பணம். அதை முதலில் ஏதாவது பித்தலாட்டங்கள் செய்து சேர்த்துக்கொள்ள வேண்டும்; பின்னால் அதைக் கொண்டு அந்தப் பித்தலாட்டங்களை மறைத்துவிடலாம். இதுதான் பெரிய மனிதனின் லட்சியம் - ஏன், லட்சணங்கூட இதுதான்; இதுவேதான்!” என்றார்.

“அந்த லட்சணங்கூட என்னிடம் இல்லையே?” என்றேன் நான்.

“இல்லாவிட்டால் என்ன, இருப்பதாகக் காட்டிக் கொண்டால் போச்சு! - அதற்கு முதற்படியாகத்தான் இன்று மாலை நான் நடத்தப்போகும் வரவேற்பு விழாவில் உன்னைக் கலந்து கொள்ளும்படி வேண்டுகிறேன்!”

“மன்னிக்க வேண்டும்; இப்படி வலுவில் புகழ் தேடிக் கொள்வதை நான் மனப்பூர்வமாக வெறுக்கிறேன். உண்மையான லட்சியவாதி என்றால், புகழ்தானாகவே அவனைத் தேடி வரும்; அவன் புகழைத் தேடிக்கொண்டு போக வேண்டியதில்லை.”

“நீ சொல்வதும் ஒருவிதத்தில் உண்மைதான்! - உண்மையான லட்சியவாதி என்றால், அவன் எதற்காகப் புகழைத் தேடிக்கொண்டு போகவேண்டும்? அதற்குள் மரணம்தான் அவனைத் தேடிக்கொண்டு வந்துவிடுமே!”

“விட்டது, கவலை! - இந்த அழகான உலகத்திலிருந்து என்னைப் போன்றவர்களுக்குச் சீக்கிரம் விடுதலையளிக்கும் அந்த மரணம் நீடுழி வாழட்டும்!”

“அப்படியானால் சரி! - நீ வாழ ஆசைப்படுவாயாக்கும் என்று நினைத்தேன்; உனக்கோ சாக ஆசையாய் இருக்கிறது - ம், அதற்கு நான் என்ன செய்ய?”

“நல்ல விஷம் ஏதாவது இருந்தால் ஒரு துளி கொடுங்களேன்!” என்றேன் நான் சிரித்துக் கொண்டே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/91&oldid=1378758" இலிருந்து மீள்விக்கப்பட்டது