பக்கம்:கண் திறக்குமா.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

கண் திறக்குமா?

மனத்தில் இனந்தெரியாத மகிழ்ச்சி, அர்த்தமில்லாத அச்சம் - இரண்டும் ஒன்றாய்க் கலந்ததும் ஏதோ ஒருவித மான இன்பம்! - எதிரே வருபவர்களைக்கூட ஏறெடுத்துப் பார்க்காமல் சிறிது தூரம் ‘விறு விறு’ என்று நடப்பேன். பிறகு, ஒரு காரணமுமின்றித் திரும்பிப் பார்ப்பேன். பின்னால் வருபவர்களை நோக்கி என் கண்கள் ஊடுருவிச் செல்லும் ஏனோ?

இருவரும் தனிமையில் சந்திக்கப் போகிறோம் - ‘என்ன பேசப் போகிறோமோ?’ என்று என் மனம் ஒரு கணம் நினைக்கும். அடுத்த கணம், ‘அந்தக் கவலை நமக்கெதற்கு, அவளே முதலில் பேச்சை ஆரம்பித்து வைப்பாள்?’ என்று தானே தீர்மானித்துக்கொள்ளும்.

இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது? - ஒன்றுமில்லை யல்லவா? - எனினும் காணாத எதையோ கண்டு விட்டவை போல என் கண்கள் மலரும்; இதழ்கள் விரியும் - இதயத்தோடு இதயம் ஒன்றித்தான்.

ஆஹா! - இந்தக் கள்ளக் காதலில் உள்ள இன்பத்தைக் காணும்போது கல்யாணத்தைப் பற்றிக் கனவு கூடக் காணாமல் இருந்துவிடலாம் போலிருக்கிறதே!

எண்ணத்தில் இனித்த பெண்ணுடன் கண்ட இந்த இன்பப் போதையிலே, ‘பாரிஸ் கார்னர்’ வரை சென்று விட்ட பிறகு தான் ‘சென்ட்ரல் ஸ்டேஷ’னைக் கடந்து வந்து விட்டோம் என்ற நினைவு என் கவனத்திற்கு வந்தது. அசட்டுச் சிரிப்புடன் அவசர அவசரமாகத் திரும்பினேன். அவள் வந்தாள்; என்னைக் கண்டதும் முதல் தடவையாக அவள் ‘மோன நகை’ புரிவதை விட்டு ‘முத்து நகை’ புரிந்தாள்.

அந்த நகைக்கு இந்த உலகத்தில் ஈடேது, இணைதான் ஏது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/97&oldid=1379026" இலிருந்து மீள்விக்கப்பட்டது