பக்கம்:கதாநாயகி.pdf/120

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110 ❖ கதாநாயகி



“உங்க அன்புக்கு மெத்த நன்றிங்க ஐயா!... உலகத்திலே நாம் அவதரித்த கடமைக்கு நம்மாலான கடமைகளை எல்லா எதிர்ப்புக்களையும் சமாளிச்சு, எதிர் நீச்சல் போட்டுக்கிட்டு செய்கிறதுக்கு நாம் எப்பவும் ரெடியாய் இருக்கவேணும். நாம் பிறரை நேசித்தால், நம்மைப் பகவான் நேசிப்பார் என்கிறதுதானே தத்துவம்?...”

“முக்காலும் உண்மைங்க!...”

“இருங்க, இதோ வருகிறேன்,” என்று சொல்லி பிளாஸ்குடன் புறப்பட்டு, காப்பியுடன் மீண்டான் அம்பலத்தரசன்.

காப்பிக்கு நன்றி கிடைத்தது.

குழந்தை பொக்கை வாய்ப் புன்னகையை மீட்டியது. அதற்குக் காப்பியுடன், அன்புப்பாசம் நிரம்பிய முத்தமும் கிடைத்தது. ஆகவே, அது இரட்டிப்புப் புன்னகை சொரிந்தது.

“இந்தத் தெய்வத்துக்குப் பெயர்....?”

“அங்கயற்கண்ணி!....” என்றாள் மலர்விழி.

“பேஷ்!... நல்ல பொருத்தம்!”

“மிஸ்டர் அம்பலத்தரசன். உங்களுக்கு மேரேஜ் ஆனதும், ஒருமுறை நீங்க தம்பதிசமேதராக எங்க இல்லத்துக்கு விருந்துக்கு வரவேணும்,” என்று சொல்லித் தன் இருப்பிட முகவரி அச்சிட்டப்பட்ட கையடக்கமான அட்டை ஒன்றை நீட்டினார் மகாலிங்கம். சொல்லிக்கொண்டு விடை பெற்றார்கள் அவர்கள். குழந்தை ‘டாடா’ சொல்லி பூக்கைகளை அசைத்தது.

அம்பலத்தரசன் அறைக்குள் நுழைந்து அமரலானான்.

கீழே காரின் குழல் ஒலி கேட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/120&oldid=1323578" இலிருந்து மீள்விக்கப்பட்டது