பக்கம்:கதாநாயகி.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் ❖129


"பரவாயில்லை. இன்னொரு செம்பு தண்ணிர் கொண்டாரேன்" என்று சொல்லி, மறுசெம்பை நீர் நிறைத்துக் கொணர்ந்து பூமிநாதனிடம் நீட்டினாள் ஊர்வசி, "உங்க மைண்ட் சரியில்லை போலிருக்கு!..." என்று மென்று விழுங்கினாள்.

பூமிநாதனோ, உமிழ் விழுங்கியவனாக, அந்தச் செம்பை பத்திரமாக ஏந்திக் கொண்டான். கை கழுவினான். அருகில் நின்ற அம்பலத்தரசனின் வசம் கொடுத்தான்.

"என்னவோ மாதிரி இருக்கீங்களே?, என்ன விசேஷம், பூமிநாதன் ஸார்?" என்று கேட்டுக்கொண்டே கைகளைத் துடைத்தான் அம்பலத்தரசன்.

"ஒன்றுமில்லை. மயக்கமாயிருந்திச்சு. அவ்வளவுதான்!" என்று சமாதானம் சொன்னான், பெரிய இடத்துப் பிள்ளை.

"வாங்க, ரெண்டு பேரும் வந்து சாப்பிடுங்க!" என்றாள் மூதாட்டி.

பூமிநாதன் முதலிலும், அதை அடுத்து அம்பலத்தரசனும் உட்கார்ந்தார்கள்.

அன்னை பாடவைத்த ரேடியோவை மகள் நிறுத்தினாள்!

நெய் இரண்டு இலைகளையும் கமழச்செய்தது. ஊர்வசியின் அன்புக் கரங்கள் பட்ட நெய் அல்லவா?

அம்பலத்தரசன் நெய்ச்சாதத்தைப் பிசைந்து, ஒரு கவளத்தை உருட்டிப் போட்டுக் கொண்டான். அவன் வலது கைப் பக்கவாட்டில் திரும்பிய சமயம், பூமிநாதன் சிந்தனை மூள, நெய்ச்சாதத்தைப் பிசைந்த மணியமாக இருந்தான்.

ஊர்வசி விழிவிரித்துப் பூமிநாதனை நோக்கினாள். அவள் திருஷ்டியில் ஏன் இந்தச் சலனம்? "ம்... சாப்பிடுங்க வில்லன் ஸார்" என்றாள் அவள். அவள் குரலில் ஆணை ஒலித்தது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/139&oldid=1307473" இலிருந்து மீள்விக்கப்பட்டது