பக்கம்:கதாநாயகி.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



4❖ கதாநாயகி


வரலாம்னு இருந்தேன். இதோ, இப்போதே புறப்பட்டு வர்றேன் ஸார்.... ஆமாம், விமர்சனத்தோடதான்!.... ஓ.கே!...” பேசி முடித்தான். செய்தி வாங்கியை அதற்குகந்த இருப்பிடத்தில் பொருத்திய சத்தத்தை அவன் காதுகள் ஏற்றுக்கொண்ட அதே நேரத்திலே, மாடிக் கதவுகள் ‘படபட’வென்று தட்டப்படும் அரவத்தையும் அவன் காதுகள் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஓர் இக்கட்டு உருப்பெற்றது. சலனம் அரவமாய் நெளிந்தது.

‘நேரம் கெட்ட நேரத்திலே யார் வந்து இப்படி அவதியோடு கதவைத் தட்டுகிறார்களோ, தெரியவில்லையே!.... ‘பூ’ விருந்து ஆபீஸ் பையன் வருவதற்கும் மார்க்கம் இல்லை ! பின் யாராக இருக்கக்கூடும்?... சீமான் மகன் பூமிநாதனாக இருக்கலாமோ? அவர் வில்லனாக நடித்த நாடகத்தைப் பற்றி என்ன விமர்சனம் எழுதியிருக்கிறேன் என்று கேட்டறிய வந்திருப்பாரோ? அவர் ரொம்பவும் மென்மையாக அல்லவா கதவைத் தட்டுவார்?.... மென்மையாக உணர்ந்த நல்லவராயிற்றே அவர்?... யாருக்கோ என்னவோ துன்பம் நேர்ந்திருக்கவேண்டும். அதனால்தான் இவ்வளவு அவசரமாகக் கதவை இடிக்கிறார்கள்!.... இப்படிக் கதவை உடைப்பதை வீட்டுக்காரர் கேட்டால், உயிரையே விட்டு விடுவாரே? அவர் உயிரைக் கொடுத்து இக் கட்டடத்தைக் கட்டிய அருமை அவருக்குத்தான் தெரியும்!....’ ஒரே வினாடியில் ஒருசில நினைவுகளைப் பின்னிய வண்ணம், மாடிப்படிகளின் வழியை அடைந்தான் அவன்; தாழ் விலக்கினான்.

என்ன வித்தை இது!

நாடகக்காரி ஊர்வசி தலைவிரி கோலமாக நின்று கொண்டிருந்தாள்! நாடகத்தில் வில்லனால் கற்பழிக்கப்பட்ட கட்டத்திலே தோற்றம் தந்த அதே கோலத்துடன் காட்சி தந்தாள்! நாடகம் முடிந்து நெடுநேரம் ஆகிவிட்டதே? பின்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/14&oldid=1327933" இலிருந்து மீள்விக்கப்பட்டது