பக்கம்:கதாநாயகி.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவைஎஸ்.ஆறுமுகம்❖ 133

அச்சம் கொழிக்க அவற்றை அவளிடம் நீட்டினான் பூமிநாதன்!

"பூமிநாதன் எழுந்திருங்க. எழுந்திருச்சுச் சாப்பிடுங்க..." என்று அன்பு தோய்த்து வேண்டினாள் ஊர்வசி, கண்ணிரும் புன்னகையும் கூடின.

பூமிநாதன் எழுந்து தன் இலையைக் கணித்து உட்கார்ந்தான். மந்திரத்துக்கு கட்டுப்பட்ட பாவனை!

"வாங்க அத்தான்; வந்து நீங்களும் சாப்பிடுங்க!"

அம்பலத்தரசனும் சாப்பிடத் தயாரானான். நீர்மணிகள் சிதறின.

அம்பலத்தரசனையும் ஊர்வசியையும் புதிய கண்ணோட்டத்தோடு பார்வையிட்டான் பூமிநாதன். அவன் கண்கள் சுட்டனவோ?...

இரு விருந்தினர்களும் உணவு கொண்டனர்.

இருவருக்கும் மத்தியில், தாம்பூலத் தட்டை வைத்தாள் ஊர்வசி.

அம்பலத்தரசன் தாம்பூலம் தரிக்க தொடங்கினான்.

"ஊம், நீங்களும் வெற்றிலை போட்டுக்கங்க. விருந்து சாப்பிட்டவங்க, வெற்றிலை போட்டுக்கிறதுதான் நம் பண்பாடுங்க, பூமிநாதன்!” என்றாள் ஊர்வசி. விநயமானபேச்சு.

இப்போது பூமிநாதனின் உதடுகள் சிவந்திருந்தது.

"சரி, இனி நீங்க புறப்படவேண்டிய வேளை வந்திட்டுது, கிளம்புங்க, மிஸ்டர் பூமிநாதன்..."

ஊர்வசி ஆணையிட்டாள்.

அவள் ஆணைக்கென்று இப்படியொரு தனி மகிமையா?...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/143&oldid=1307070" இலிருந்து மீள்விக்கப்பட்டது