பக்கம்:கதாநாயகி.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28*கதாநாயகி


பராசக்தியின் தெய்வக் கோலம் மட்டுமே அவனுள் பதிந்திருந்தது. உள்ளத்தெழுந்த தெய்வ ஒளி அவனுடைய கைகளுக்குப் பாய்ந்தது. அந்தக்கைகள் குவிந்தன. குவிந்த வண்ணமே இருந்தன, விழிமலர்களில் நீர் முத்துகள் தத்தளித்தன.

சூழ இருந்தவர்கள் அதிசயித்தார்கள்.

சூழல் உணரப்பட்ட தருணத்தில், அம்பலத்தரசன் தன்னை உணர்ந்தான். ஊர்வசியைப் பார்த்தான். மறுதரமும் அவள் சிரித்தாள். எந்நேரத்தில் சிரித்தாளோ? அந்தச் சிரிப்பு அவனுள் பதிவாகிவிட்டது. அவள் சிரித்த வேளை அது! மானுடத்துக்குரிய சிரிப்பா அது!...

அவள் தெய்வமாகி நின்றாள், அன்று.

இன்று, அவளே தெய்வமாகி வந்தாளோ?

தெய்வம் தேடிவரக்கூடாதா, என்ன?

தெய்வம் பேஷாகத் தேடிவரலாம்! இதோ, தேடி வந்து விட்டதே!

எரிந்த சிகரெட் அவன் விரல் நுனியைச் சுட்டதும்தான், அவனுக்கு தான் இருந்த ஹோட்டலின் ஞாபகம் சுட்டது. எழுந்தான். வாசலுக்கு விரைந்தான். இடது பக்கம் திரும்புவதற்குப் பதிலாக, வலப்புறம் மடங்கினான்.

பிராட்வே வந்தது.

முச்சந்தியில் வந்து நின்றான் அவன்.

மம்மல் பொழுது சிறுகச் சிறுக வடியத் தலைப்பட்டது. குளிர்காற்றின் வாடை லேசாக உறவாடியிருந்தது.

தேடிவந்த ஊர்வசியைப்பற்றின ஞாபகம்தான் அவனுக்கு இப்போதும் கிளர்ந்தெழுந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/38&oldid=1319033" இலிருந்து மீள்விக்கப்பட்டது