பக்கம்:கதாநாயகி.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம் *29


'யாருமே வேடதாரியாகவோ, கோழையாகவோ ஆகிவிடக்கூடாது!’ என்று சுவாமி விவேகானந்தர் மொழிந்த அருள்வாசகத்தை எண்ணிச் சிந்திக்கச் செய்தவள் ஊர்வசியே அன்றோ?

தான் கற்பழிக்கப்பட்டவள் எனத் தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொண்ட அவளது வெகுளித்தன்மையும் துணிச்சலும் சேர்ந்து ஒர் அதிசயமான உருவத்தை அவன் முன் சமைத்துக் காண்பித்தது. அந்த உருவத்துக்குச் சொந்தக்காரி ஊர்வசி என்பதும் அவனுக்குப் புரியாத உண்மையல்லவே!

'அவள் தன் நிலைமையை எவ்வளவு அப்பட்டமாகத் தெளிவுபடுத்திக் காட்டிவிட்டாள்! ஆனால், நான்? தன்னைப் பற்றிய கேள்வியை, தன்னுணர்வை மீறிய ரீதியில் தன் மனச்சாட்சி கேட்டு நிறுத்தியதை, அவன் நுணுக்கமாகத்தான் உணர முடிந்தது. தன்னைப் பற்றிய ஆய்வில் அவன் ஈடுபடவேண்டுமென்று அவனது சுயப் பிரக்ஞை கட்டளை பிறப்பித்தது. ஆனால் அக்கட்டளையை அவன் செயற்படுத்த முனைந்தபோதோ, அவனது உள்மனம் ஏனோ பின்வாங்கியது.

அதற்குள், அவனுடைய மனப்புள் வேறொரு கிளைக்குப் பறந்து விட்டது. 'பாவம், ஊர்வசி!.... அவளைக் கெடுத்த அந்தப்பாவி யார்? அதைப் பற்றி அவள் எதுவுமே சொல்லவில்லையே? ஏன்?... தன்னை தன் விலை மதிப்பற்ற பெண்மையை சேம நிதியான கற்பைக் காப்பாற்றிக் கொள்ள அவள் தன் சக்திகொண்ட மட்டும் பாடுபட்டுத் தான் இருப்பாள்! அதற்குச் சந்தேகமேயில்லை!... பாவம், விதி!அவளைச் சோதித்து விட்டது...!'

அவளைக் குறித்த அனுதாபமே அவனது இதயத்தில் பரிமளித்தது. கண்கள் கலக்கம் கண்டன.

சமுதாயத்தின் கண்களை அவன் அறியானா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/39&oldid=1319060" இலிருந்து மீள்விக்கப்பட்டது