பக்கம்:கதாநாயகி.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பூவை எஸ். ஆறுமுகம் ❖ 33


அன்றையப் புதுப் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தான் அம்பலத்தரசன்.

ரேடியோலை ‘ட்யூன்’ பண்ணிக்கொண்டிருந்தாள் ஊர்வசி. பூங்கரங்களில் இழைந்த தங்க வளையல்கள் நயம் சேர்த்துக் குலுங்கின. அம்மையப்பனான ஒப்பிலா மணியைத் துதித்துக் கொண்டிருந்தது. ‘மர்ஃபி’

“அப்புறம் உன் திட்டம் என்ன, ஊர்வசி?” மேஜையின் அடித்தளத்தில் தன்னுடைய எழிலார்ந்த நெஞ்சைப் பதித்து ரேடியோவைக் கேட்டுக் கொண்டிருந்தவள், எழுந்து அவனைப் பார்த்துக்கொண்டே, “என்னையே உங்ககிட்ட நான் ஒப்படைச்சிட்ட பிற்பாடு, தனியே பிரிச்சு என்கிட்ட என்னோட திட்டத்தைப் பத்திக் கேட்கிறீங்களே?” என்று சொன்னாள்.

“நீ சொல்றது மெய்தான். அதற்காகச் சொல்லலே. மேற்கொண்டு என்ன நடக்க வேணுமிங்கிறதைப் பற்றி நான் தெரிஞ்சுக்க வேணுமில்லையா, அதுக்காகவே கேட்டேன்”, என்று தன் கேள்விக்கு விளக்கத்தை எடுத்துக்காட்டினான் அம்பலத்தரசன்.

அவள் என்னவோ சொல்ல வாயெடுத்தாள். அந்நேரத்தில், கீழ்த்தளத்தில் இருந்த வீட்டின் சொந்தக்காரர் மாடிக்கு வந்து சேர்ந்தார். அன்றாடப் பத்திரிகைச் செய்திகளை இனாமாகப் படித்துச் செல்லும் மாமூல்படி அன்றும் வந்தார் அவர். அவருக்கும் பெயர் உண்டு. அது குஞ்சிதபாதம் என்பதாகும். வந்த மனிதர் தம்முடைய பன்றி முடியை நரை திரண்டிருந்த அம்முடியை இடது கை விரல் கொண்டு கோதிவிட்டவராக, ஊர்வசியை ‘ஒரு மாதிரியாக’ப் பார்த்தார்.

இந்த நாடகக்காரி எங்கே இங்கு வந்தது? என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/43&oldid=1327937" இலிருந்து மீள்விக்கப்பட்டது