பக்கம்:கதாநாயகி.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம் ❖ 37


தவிச்சுட்டிருக்கிறதாக பூமிநாதன் கொஞ்ச முந்தி வழியிலே கண்டு கொன்னார்!” என்றான் அம்பலத்தரசன். சொல்லிக்கொண்டே ஊர்வசியை நோக்கினான் அவன்.

அவளுடைய முகம் கணப்பொழுது துணுக்குற்றது. பின், தன் திகிலை மாற்றிய வண்ணம். “அப்படியா?” என்றாள். அவள் குரல் சகஜமாகப் படவில்லை அவனுக்கு.

‘ஊம்’ கொட்டினான் அவன், ‘பாவம், தன்னைக் காணாமல் வேதனைப்பட்ட அன்னைக்காக அவள் இவ்வாறு திகிலடைந்திருக்க வேண்டும்!

“அப்படியென்றால் நீ நேரத்தோடே புறப்படு, ஊர்வசி!”

அவள் விநயமாகப் புன்னகை செய்து விட்டு, “நான் மட்டும் புறப்படவா? என்னோடே நீங்களும் வந்தாக வேணுமுங்க!” என்றும் அறிவித்தாள்.

சற்றேனும் சிந்திக்கவில்லை அவன். இந்த முடிவை அவன் அவளிடமிருந்து எதிர்நோக்கியிருந்தவன் போன்று, “ஆகட்டும். நாம் இருவருமே புறப்படலாம். இதோ, ஒரு நிமிஷத்தில் குளித்துவிட்டு வந்து விடுகிறேன்.” என்றான் அவன், முகத்தைத் தடவியபடி, மயிர்க்கால்கள் கால்பாவத் தலைப்பட்டிருந்தன.

“பத்து நிமிஷங்களுக்குள். நீங்க குளிச்சிட்டு வந்தால் யதேஷ்டம்!” என்றாள் அவள்.

நல்ல மனத்தில் நகைச்சுவை தோன்றுவது இயல்பு என்ற உண்மையை, அறிந்தவர்கள் சொல்லக் கேட்டிருந்தான் அவன். ‘ஊர்வசி வாஸ்தவமாகவே நல்லவள்தான்! ஆனால் பாவம்...?’

அவன் அவள் பேச்சை அனுபவித்தவாறு குளிப்பதற்குப் புறப்பட்டான்.

டவல், சோப்புப்பெட்டி ஆகியவற்றை எடுத்து நீட்டினாள் ஊர்வசி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/47&oldid=1327934" இலிருந்து மீள்விக்கப்பட்டது