பக்கம்:கதாநாயகி.pdf/72

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62*கதாநாயகி



கதாசிரியருக்கு ஒரு யோசனை.

அநீதியான முறையிலே கற்பழிக்கப்பட்ட பெண்களுக்குக் கடலைத்தான் முடிவாகக் காட்டவேண்டுமா அவர்? இம்மாதிரியான கதை, சிருஷ்டியின் தத்துவத்துக்கே சோதனையாகிவிடாதா? படைக்கப்படும் உயிர்கள், வாழ்வதற்கே படைக்கப்பட்டவை. இதுதான் உயிரின் தத்துவப் பொருள்! இதை மறந்தார் கதாசிரியர்! இம்மாதிரியான அபலைகள், இம்மாதிரியான அவல நிலைக்கு ஆளாகும் - ஆளாக்கப்படும் முடிவுகள் கைவிடப்படவேண்டும். அப்பொழுதுதான் வாழ்க்கைக்குரிய உள்நோக்கம் நிறைவேறும். 'வாழ்வதற்கே!' என்ற நாடகத் தலைப்பும் சிறப்புறும். வாழ்க்கை வாழ்வதற்குத்தான்! வாழ்வதற்கேதான்!

அடுத்தபடியாக நம் கவனத்தைக் கவர்கிறார், வில்லனாக அபலையைக் கற்பழிக்கும் பாத்திரம் ஏந்திய தீக்குணனாக நடித்த பூமிநாதன். அவர் சாகஸமாக நடித்தார். சாகலத்தையே பிறப்புரிமையாகக் கொண்ட பாங்கில் அவரது நடிப்பு இருந்தது. மனிதனுள்ளே மிருகமும் வாசம் செய்யும் என்னும் உட்கருத்தைச் செம்மைப்படவே நிரூபணம் செய்து காட்டிவிட்டார் அந்த அன்பர்!

நாயகனாக நடித்தவர் நம் அனுதாபத்துக்குரியவர்.

விதியைச் சாடும் நெஞ்சுரம் உள்ளவன்தான், காதல் எனும் புனித வலையையும் விரிக்கத் தகுதி பெற முடியும். தியாகம் என்கிற திறனும் எல்லோருக்கும் வந்துவிடாது. காதலித்தவளைக் கைவிட்டுவிடும் பத்தாம் பசலியாகக் காட்சி தரும் அவர் அழகனாக மட்டுமே தோன்றுகிறார். கோழையாகவே நாம் அவரை மதிப்பிடுகிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/72&oldid=1319029" இலிருந்து மீள்விக்கப்பட்டது