பக்கம்:கதாநாயகி.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64*கதாநாயகி



மூலாதாரமாக இருந்தது, ஊர்வசி தன்பால் கொண்டிருந்த நல்லெண்ணமும் நன்னம்பிக்கையுமே என்பதையும் அவன் கணித்துக் கொண்டான். அப்புறம்தான், அவன் அங்கிருந்து டிக்கடை நோக்கிக் கிளம்பினான்.

பத்திரிகையின் தலைப்புச் செய்திகளில் மனம் சென்றது.

ருஷ்ய நிருபர்களின் கூட்டத்தில் பேசிய அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர், நேருஜியின் கூட்டு சேராக் கொள்கையை, பாரதம் தொடர்ந்து பின்பற்றி வரும் என்பதை வலியுறுத்திய பேச்சைப் படித்தான்; போற்றினான்.

கம்யூனிஸ்ட் கட்சித் தலைமைக் காரியதரிசிக்கு லெனின் தந்தச் சிலையொன்றை காங்கிரஸ் தலைவர் அன்பளிப்பாக வழங்கிய காட்சியையும் கண்டு களிப்பு எய்தினான் அவன்.

ஆடிக்காற்று வீசியது.

ரேடியோவைத் திருகினான். திருகினால் பாட்டு வருமா? திருப்பினான். அதாவது, 'ட்யூன்' செய்தான். இதயத்தைத் தொடும் 'ட்யூன்' மிதந்தது. அம் மகிழ்வில் திளைத்த அவனுக்கு, நேற்றுச் சுரந்த கவிதையின் ஞாபகம் எழுந்தது. ஊர்வசியின் முதற் சந்திப்பிலே அவள் சிரித்த அந்தப் புனிதச் சிரிப்பை நெஞ்சில் ஒலிக்கச் செய்து ஆனந்தமடைந்தான். அவள் சிரித்த வேளையில்தான். படைப்பின் விட்ட குறை தொட்டுத் தொடர்ந்ததோ? அச்சிரிப்புத்தான் விதியின் சிரிப்புக்கு விடப்பட்ட சவாலோ?

தன்னை மறந்து சிரித்துக் கொண்டான் அம்பலத்தரசன். கவிதையின் உணர்ச்சித் தீவிரம் அவனை மெய்மறக்க வைத்தது. பேனாவைத் தேடினான். தேடி வந்தது அது.

சிகரெட்டின் துணுக்குகள் கூடிச் சேர்ந்தன.

ஊர்வசி சிரித்தாள்!...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/74&oldid=1319034" இலிருந்து மீள்விக்கப்பட்டது