பக்கம்:கதை சொன்னவர் கதை 2.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இல்லை. வீட்டுக்கு வந்துதான், ஓட்டத்தை நிறுத்தியது!

மிகுந்த களைப்பாக இருந்ததால், பேசாமல் வீட்டின் ஒரு மூலையில் போய்ப் படுத்து விட்டது. சட்டையையும், செருப்பையும் தொலைத்து விட்டு வந்திருந்த பீட்டரைப் பார்த்ததும், அம்மா முயலுக்கு மிகவும் வருத்தமாயிருந்தது. ‘அடிக்கடி இப்படி எதையாவது தொலைத்து விட்டு வருகிறதே!’ என்று முணுமுணுத்தது.

அன்று முழுவதும் பீட்டருக்கு உடம்பு சரியில்லை. அம்மா முயல் கஷாயம் தயார் செய்து, பீட்டருக்குக் கொடுத்தது. கசப்பான அந்தக் கஷாயத்தைக் கண்களை மூடிக் கொண்டு, பீட்டர் ‘மடக், மடக்’கென்று குடித்தது. அதே சமயம், மற்ற மூன்று முயல் குட்டிகளும் கண்களை நன்றாகத் திறந்து வைத்துக் கொண்டு, அம்மா கொடுத்த ரொட்டியையும், பாலையும் ஆனந்தமாகச் சாப்பிட்டன.

இந்தக் கதையில் வரும் பீட்டர் என்ற முயல் குட்டி பிறந்தது. 1893-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆகும்! ஆம், அப்போதுதான் இந்தக் கதையை பியேட்ரிக்ஸ் பாட்டர் (Beatrix Potter) என்ற 27 வயதுப் பெண்மணி முதல் முதலாகக் கூறினார். யாரிடத்தில்? குழந்தைகளைக் கூட்டி வைத்துக் கொண்டு, அவர்களிடத்தில் இந்தக் கதையைக் கூறினாரா? இல்லை, கூடப் பிறந்த தம்பி, தங்கைகளிடம் கூறியிருப்பாரோ? அதுவும் இல்லை. அப்படியானால், யாரிடத்தில்தான் இந்தக் குறும்புக்கார முயல் குட்டியின் கதையை முதல் முதலாகக் கூறினாராம்?

49