பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முகவுரை

முருகனுடைய திருவருளில் ஈடுபட்டவர்கள் பலர். ஆனால் மற்றவர்களையும் அப்படி ஈடுபடச் செய்யும் வழிகாட்டிகளிலே சிறந்தவர் அருணகிரிநாதர். அவர் பாடிய திருப்புகழ் இன்று தமிழர் வாழும் இடமெல்லாம் பரவி முருக பக்தியை மேன்மேலும் வளர்த்து வருகிறது. அந்த நூலையன்றி அருணகிரிநாதப் பெருமான் அருளிய கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, கந்தர் அந்தாதி, திருவகுப்பு என்னும் நூல்களும் அற்புதமானவை; பாராயண நூல்களாக மேற்கொள்வதற்கு உரியவை.

கந்தர் அலங்காரம் நூறு கட்டளைக் கலித்துறையால் ஆகியது.
   “கந்தன் நன்னூல்"
   அலங்காரம் நூற்றுள் ஒருகவி தான்கற் றறிந்தவரே"

என்று அந்நூலின் பயனாக உள்ள பாட்டினால், அது நூறு பாடல்களை உடையது என்று தெரிய வருகிறது. ஆயினும் நூற்றுக்கு அப்பாலும் சில கவிகள் வழக்கில் இருந்து வருகின்றன.

அலங்காரம் என்ற பெயரோடு உள்ள நூல்கள் முன்பும் தமிழில் இருந்தன. ஆனால் அவை தமிழ் இலக்கணம் ஐந்தில் ஒன்றாகிய அணி இலக்கணத்தைச் சொல்லும் நூல்கள். தண்டியலங்காரம், மாறன் அலங்காரம் என்பவை அத்தகையனவே. கண்டன் அலங்காரம் என்ற நூல் ஒன்று முன்பு இருந்த தென்று தெரிய வருகிறது. அதிலுள்ள சில செய்யுட்கள் மாத்திரம் இப்போது கிடைக்கின்றன. அவற்றிலிருந்து அது கண்டன் என்னும் சிறப்புப் பெயரை உடைய இரண்டாம் இராசராச சோழனுடைய புகழைச் சொல்லும் நூல் என்றும், அகத்துறைப் பாடல்கள் அமைந்தது என்றும் புலனாகிறது. சமீப காலத்தில் வாழ்ந்த திருப்புகழ்ச் சுவாமிகள் என்ற தண்டபாணி சுவாமிகள் தமிழ் அலங்காரம் என்று ஒரு நூல் பாடியுள்ளார். அது தமிழின் பெருமையை விளக்கும் நூல். கந்தர் அலங்காரத்தை எண்ணி