பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/142

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

இப்படி அந்த வீட்டின் சொந்தக்காரர்களாகிய ஐந்து பிள்ளைகளாலும், அந்த வீட்டில் குடியிருக்கின்ற அவர் ஐந்து விதமான புலன்களினாலும் அநுபவிக்கின்ற அநுபவங்களுக்குத் தடை உண்டாகிறது. அவர்களுடைய வீட்டில் வசிக்கிற அவர் என்ன செய்வார் குடிக் கூலி கொடுத்துக் கொண்டுதான் அந்த வீட்டில் வசிக்கிறார். ஆனால் தம் விருப்பப்படி எதையும் அங்கே அநுபவிக்கச் சுதந்தரம் இல்லை.

இந்தக் கதையைப் போன்றதுதான் நம்முடைய வாழ்வும். நம்முடைய உடம்பாகிய வீட்டில் நாள்தோறும் நடக்கும் நிகழ்ச்சி இது. 'அற்புதமாகத் திருப்புகழை யாரோ பாடுகிறார்களே; அதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்கலாம்' என்று இவன் ஆசைப்படுகிறான். ஆனால் அவனுடைய காதோ அதைக் கேட்கப் போகிறதில்லை. அந்த வீட்டுக்கு எதிரேயுள்ள டிக்கடையிலிருந்து வரும் சினிமாச் சங்கீதத்தைக் கேட்கத் தாவுகிறது. ஆண்டவன் நமக்கு உண்டாக்கிய கைகள் இருக்கின்றனவே, அவற்றால் நல்ல நல்ல பூக்களை எடுத்து அவனுக்கு அர்ச்சனை செய்யலாம், அலங்காரம் பண்ணலாம் என்று இவன் ஆசைப்படுகிறான். ஆனால் இவனுடைய கைகள் அதைச் செய்யப் போவதில்லை; செய்யத்தகாத பல காரியங்களை எல்லாம் செய்யப் போகின்றன. ஆண்டவனது திருவுருவத்திற்குப் பூவாலும், அணியாலும் அலங்காரம் பண்ணியிருக்கிறார்களே, அதைக் கண் குளிரக் கண்டு கொஞ்சம் களிக்கலாம் என்று இவன் ஆசைப்படுகிறான். ஆனால் அந்தக் கண்கள் அதைக் காணப்போவதில்லை; பார்க்கத் தகாத பொருளை எல்லாம் காசு கொடுத்துப் பார்க்கப் போகின்றன. ஆண்டவனது திருக் கோயிலைச் சுற்றி அழகான நந்தவனங்களை எல்லாம் உண்டு பண்ணியிருக்கிறார்கள்; அங்கே போய்க் கொஞ்சம் நல்ல காற்றை அநுபவித்துவிட்டு வரலாம் என்று இவன் ஆசைப்படுகிறான். ஆனால் இவன் கால்கள் அங்கே போவதில்லை. பருத்தி விலைச் சூதாட்டத்துக்குப் போய்ப் போலீஸ்காரர்கள் வருகிறார்கள் எனப் பயந்து, காற்றுக்கூட உள்ளே புகாத இருட்டறைக்குள் நுழைந்து கொண்டு புழுங்கித் துன்புறப் போகின்றன. ஆண்டவனுக்கு நிவேதனம் செய்து கோயிலிலே நல்ல நல்ல பிரசாதங்கள் கொடுக்கிறார்கள்; அவற்றை வாங்கிச் சாப்பிடுவோம் என்று இவன் ஆசைப்படுகிறான். ஆனால் இவன் நாக்கு அதைச் சுவைப்

134