பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/146

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

அடைவது இன்ப வாழ்வு அல்ல; சுக வாழ்வு. ஆனந்தம், சுகத்திற்கும் துக்கத்திற்கும் அப்பாற்பட்டது.

விளக்கு நல்ல ஒளியைத் தரக்கூடியதுதான். விளக்கிலிருந்து வெளிச்சம் வருகிறது. ஆனால் அந்த விளக்குக்கு அடியில் போய்ப் பார்த்தால், அந்த விளக்கின் நிழல் படிந்திருக்கும். தேவர்கள் விளக்கு ஒளியைப் போன்றவர்கள். இன்பமாகிய ஒளியும், துன்பமாகிய நிழலும் உடையவர்கள். ஆனந்தம் என்பது சுகமும் அல்லாமல், துக்கமும் அல்லாமல் எல்லாவற்றையும் கடந்து, நிழலே விழாத சூரியனின் ஒளியைப் போன்றது. நிழலே இல்லாத இந்த ஆனந்தத்தை அடைய வேண்டுமென்றால் முத்தியை அடைய வேண்டும். அதனைப் பெறுவதற்கு வழி என்ன? அந்த முத்தியை விளைவிக்கக்கூடிய இந்தப் பூலோகத்தில் வந்து பிறந்து, நல்ல நல்ல காரியங்களை எல்லாம் செய்து, பொறிகளை அடக்கித் தவம் பண்ண வேண்டும்; ஈரம் காய்ந்து முற்றிய வித்தைப் போல ஆக வேண்டும். ஐம்பொறிகளை அடக்கி, ஈரமின்றி முற்றினால், முத்தி நிலத்தில் முளைத்துப் போகம் பெறலாம்.

திருவள்ளுவர் ஐந்து களிறுகளை அடக்க வேண்டுமென்று சொல்கிறார். இந்த ஐந்து யானைகளும் மதம் பிடித்த யானைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு பக்கம் இழுத்துக் கொண்டு போகின்றது. அவற்றை அடக்க வேண்டும். களிற்றை அடக்குவதற்கு யானைப் பாகன் தன் கையில் என்ன வைத்திருக்கிறான்? அங்குசத்தை வைத்திருக்கிறான். பொறிகளை அடக்கும் அங்குசம் ஞானம். யார் ஞானம் என்ற அங்குசத்தைப் பெற்றிருக்கிறார்களோ அவர்கள் ஐந்து பொறிகளாகிய யானைகளை அடக்கி விடுவார்கள். அந்த ஞானத்திற்குத்தான் 'உரன்’ என்று பெயர். உரன் பெற்றவர்கள், ஞானம் பெற்றவர்கள், ஆத்மாவுக்குத் துன்பத்தைத் தருவதற்குக் காரணமான ஐந்து இந்திரியங்கள் என்ற மதம் பிடித்த யானைகளை அடக்குகிறார்கள். அவ்வாறு பொறிகளை அடக்கி வென்றவர்கள் முத்தி நிலத்தில் விளைகின்ற வித்துப் போன்றவர்கள். இது வள்ளுவர் சொல்லும் உண்மை.

பொறியை அடக்குதல்

பொறிகளாகிய ஐந்து களிறுகளையும் அடக்குவதற்கு நாம் ஒவ்வொருவரும் வாழ்நாளில் முயற்சி செய்ய வேண்டும்.

138