பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/147

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஐந்து பகைவர்

அதற்காகத்தான் பூசை முதலியன வைத்திருக்கிறார்கள். ஐந்து பொறிகளையும் இரண்டு விதமான முறையில் அடக்கலாம். தவம் பண்ணி, வேதாந்த சித்தாந்தங்களை எல்லாம் படித்து, ஞான விசாரத்தினால் இந்திரியங்களை நிக்கிரகம் செய்வதன் மூலம் அவற்றை அடக்கிவிடலாம். ஆனால் இந்த முறை சிங்கத்தைக் கட்டிப் போடுவது போன்றது. கட்டிப் போட்டிருக்கிற வரையில் சிங்கம் சாதுவாக இருக்கும். கட்டுத் தளர்ந்து விடுபட்டால் எல்லையற்ற தீங்கு விளைந்துவிடும். அது போன்றதுதான் இந்த முறை. இந்த முறை கடினமானது. நல்ல சுவையுள்ள சாப்பாட்டைச் சாப்பிட வேண்டுமென்று அவர்கள் நாக்கு விரும்பும். சேர்ந்தாற் போலப் பத்து நாள் பட்டினி கிட என்று வயிற்றைப் பட்டினி போடுவார்கள். நல்ல சுகமான தென்றல் காற்றை அநுபவிக்க அவர்கள் உடம்பு விரும்பும். சேர்ந்தாற்போலப் பல ஆண்டுகள் காற்றுப் புகாத குகைக்குள் நுழைந்து கொண்டு உடம்பை புழுக்கத்தால் வாடிப் போகச் செய்வார்கள். குளிர்ச்சியான இடத்திற்குப் போய் இன்புற அவர்கள் உடம்பு விரும்பும். அப்போது தான் மண்டை வெடிக்கிறது போல இருக்கின்ற வெயிலில் நின்று கொண்டு தவம் செய்வார்கள். "நிரம்பக் குளிராக இருக்கிறதே; கொஞ்சம் குளிர் காய்ந்தால் நன்றாக இருக்கும்" என்று அவர்கள் உடம்பு விரும்பும். அப்போதுதான் சில்லென்று இருக்கிற தண்ணிருக்குள் மூழ்கித் தவம் பண்ணுவார்கள். இப்படி அவர்களுடைய பொறிகள் என்ன என்ன அநுபவிக்க வேண்டுமென்று விரும்புகின்றனவோ அதற்கு நேர்விரோதமான பாதையில் அவற்றைச் செலுத்தி அவற்றின் ஆசையைக் குலைத்து வெல்வார்கள்.

இது ஞானயோகிகளுக்குச் சாத்தியமாகும். இந்த முறை நமக்கு ஏற்றது என்று சொல்ல முடியாது. அந்த ஞானயோகிகள் செல்கின்ற மார்க்கத்திலே ஒரு சின்னத் தவறு ஏற்பட்டு விட்டாலும் அவர்களுக்கு எல்லை இல்லாத தீங்கு உண்டாகி விடும். எறும்பு விழுந்தால் அடிபடாது. யானை கீழே விழுந்தால் என்ன ஆகும்? அந்த மாதிரியே ஞானயோகிகள் தாங்கள் செல்கிற பாதையில் சின்னத் தவறு இழைத்துவிட்டாலும் அது அவர்கள் வாழ்க்கையில் பெரிய தீங்காய் முடியும்.

ஆனால், முத்தி அடைவதற்கு எளிய வழி ஒன்றும் இல்லையா? இருக்கிறது. "உலகத்திலுள்ள பொருள்களை எல்லாம் ஐந்து

139