பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/161

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஐந்து பகைவர்

இந்திராணி தன்னுடைய கற்புக்கு ஊறு நேரிட்டுவிடுமோ என அஞ்சி ஒடி ஒளிந்து கொண்டு விட்டாள். பிள்ளை ஒரு பக்கம் வாட மனைவி ஒரு பக்கம் ஒட, தேவேந்திரன் நாட்டை இழந்து, ஆட்சி உரிமையை இழந்து, அடிமைப்பட்டு வாடினான். தேவர்கள் தாங்கள் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய முடியாமல் சிறையில் வாடினார்கள். நீ என்ன செய்தாய்? கோடிக் கணக்கான அசுரர்களையும் வென்று, தேவர்களுக்கு அவர்களுடைய லோகத்தைத் திரும்பவும் வாங்கிக் கொடுத்தாய் அல்லவா? அவர்களுக்கு நீதானே சுயராஜ்யம் வாங்கிக் கொடுத்தாய்? அது எனக்குத் தெரியாதா? கொஞ்ச காலம் குடியிருக்கும்படி எனக்குக் கொடுத்திருக்கிற வீட்டில் ஐந்து அசுரர்கள் புகுந்துகொண்டு துன்பம் இழைத்து வருகிறார்கள். கோடிக் கணக்கான அசுரர்களை வதை செய்த நீ நினைத்தால் இந்த அசுரர்களையும் அழிப்பது பெரிய காரியமா? எனக்கு நீ பிச்சையாகக் கொடுத்தது, இந்த உடம்பு. அதனை ஐந்து பேர்களும் பிடுங்கிக் கொண்டதோடு அல்லாமல், என்னையும் தங்களுக்கு அடிமையாக்கிவிட்டார்கள். இங்கே நான் நினைப்பதைச் செய்யக்கூடிய சுதந்தரம் இல்லை. செய்யவொட்டாமல் அவர்கள் தடுக்கிறார்கள். எனக்குச் சுயராஜ்யம் வேண்டும். பல காலம் போராடித் தேவர்களுக்கு அவர்களுடைய ராஜ்யத்தைத் திரும்பவும் வாங்கிக் கொடுத்த கருணையாளன் அல்லவா நீ? உன்னைத் தவிர நான் வேறு யாரிடம் போய் எனக்குச் சுயராஜ்யம் வாங்கிக் கொடு என்று கேட்பேன்" என்கிறார்.

இந்தப் பாட்டை இதற்கு முந்திய பாட்டுடன் தொடர்பு செய்தது போலச் சொல்கிறார். முந்திய பாட்டில், "கிரெளஞ்சம் குலைந்தது; அரக்கன் நேரணி இட்டு வளைந்த கடகம் நெளிந்தது; சூர்ப் பேரணி கெட்டது; தேவேந்திர லோகம் பிழைத்தது" என்று சொன்னார். தாங்கள் பெற்ற இன்ப வாழ்க்கையை நடுவிலே இழந்து, சூரபன்மன் முதலியவர்களால் மிகுந்த துன்பத்திற்கு ஆளான தேவர்கள் திரும்பவும் உன்னுடைய கருணையினால் இன்ப வாழ்வைப் பெற்றார்கள் என்று சொன்னார். சூரன் என்ன ஆனான் என்று அங்கே சொல்லவில்லை. இந்தப் பாட்டிலே சொல்கிறார்.

க.சொ.1-11

153