பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/169

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறிஞ்சிக் கிழவன்

"பழமுதிர் சோலை மலைகிழ வோனே"

என்று அவர் பாடியிருக்கிறார். 'கிழவன்' என்ற சொல்லுக்கு இப்போது வழங்கும் பொருள் முன்பு இல்லை. கிழவன் என்பதற்கு உரியவன் என்றுதான் பொருள். ஒரு பெண்ணின் கணவனை, 'கிழவன்' என்று சொல்வார்கள். அவ்வாறே மனைவியை 'கிழவி' என்பார்கள்.

“செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்"

என்று வள்ளுவர் சொல்கிறார்.

"நிலத்திற்கு உடையவன், தானே நிலத்திற்குப் போய்க் கவனிக்காமல் வீட்டில் இருந்தால், தன்னைக் கவனிக்காத கணவனிடம் மனைவி ஊடல் கொள்வது போல நிலம் விளைவு தராமல் போய்விடும்" என்பது இதன் பொருள். இதில் கிழவன் என்ற சொல் உரியவன் என்ற பொருளில்தான் வந்திருக்கிறது. மலைகளுக்கு உரியவன் முருகன். அவன் மலையாண்டி. மலையும் அதைச் சார்ந்த இடமும் குறிஞ்சி நிலம். குறிஞ்சி நிலத்துக்கு உரியவனாகையால் "குறிஞ்சிக் கிழவன்" என்று முருகனை அழைப்பார்கள்.

ஐந்திணை

லகத்தைக் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்று ஐந்து வகைகளாகத் தமிழர்கள் பிரித்தார்கள். மலையும் மலையைச் சார்ந்த இடமும் குறிஞ்சி நிலம் என்று பெயர் பெறும். ஒன்றும் வளராமல் இருக்கிற இடம் பாலை நிலம். ஒரே காடாக இருக்கிற பகுதி முல்லை நிலம். வேளாண்மை செய்யும் வயல்களை உடைய இடம் மருத நிலம். கடலைச் சார்ந்த இடம் நெய்தல் நிலம். ஒர் ஆறு மலையிலே உற்பத்தியாகி, ஒன்றும் விளையாத பாலைவனத்தின் வழியே போய், காட்டுக்குள் நுழைந்து, மக்கள் வசிக்கின்ற ஊருக்குள் புகுந்து, கடைசியில் கடலோடு கலக்கிறது என்பதை நினைவுபடுத்திக் கொண்டால் இந்த ஐந்து திணைகளையும் முறையாகத் தெரிந்து கொள்ளலாம்.

குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய இந்த ஐந்து நிலங்களுக்கும் உரியவர்களாக ஐந்து தெய்வங்களைத்

161