பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/190

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

4

அழுகையின் எதிரொலி

எப்படி அழுதான்?

கடலழக் குன்றழச் சூரழ விம்மிஅழும் குருந்தை

என்கிறார் அருணகிரியார்.

சூரபன்மன் என்ற அரசன் தேவர்களுடைய அரசைக் கைப்பற்றிக் கொண்டான்; அவர்களைச் சிறையில் இட்டான்; உலகிலுள்ள உயிர்கள் துன்பம் உறும் வண்ணம் கொடுமை ஆட்சி புரிந்து கொண்டிருந்தான். அவனை அடக்குவார் யாரும் இல்லாததால் அவன் பலம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டிருந்தது. கொஞ்சம் பணம் வந்தவர்கள், 'அடுத்து அடுத்துப் பணம் வந்து கொண்டே இருக்குமா?' என்று தங்கள் ஜாதகத்தை ஜோசியனிடம் காட்டுவார்கள். அதைப்போல அவன் தன்னுடைய ஜாதகத்தை ஒருவனிடம் காட்டியிருக்கிறான். அவர் நல்ல ஜோசியர் யாருக்கும் பயந்துகொண்டு உண்மையை மறைப்பவர் அல்ல. அவர் அவனுக்கு உண்மையைச் சொல்லிவிட்டார் போலிருக்கிறது. "உன்னுடைய செல்வாக்குக்கு இப்பொழுது ஒன்றும் குறைவு வராது. ஆனால் இந்த உலகத்தில் ஒரு குழந்தையின் அழுகைக் குரல் கேட்கும். உடனே நீ தெரிந்து கொண்டுவிடலாம், உன் வாழ்நாள் அப்பொழுதே முடிந்துவிட்டது என்று" என அவர் சொல்லிவிட்டார். அன்றிலிருந்து அவன் உலகத்தில் பிறக்கின்ற குழந்தைகளின் அழுகையை எல்லாம் கேட்டுக் கொண்டே இருந்தான். அழுகைக் குரல் கேட்டால் அது எங்கிருந்து வருகிறது என்று ஆராய்வான். "இது சாமானியக் குழந்தையின் அழுகுரல் தான்" என்று தெரிந்துவிடும். ஆனால் இன்றைக்குச் சரவணப் பொய்கையில் தாமரைத் தொட்டிலில் படுத்து அழுகிற குழந்தையின் அழுகையைக் கேட்டவுடன் அவன் உடம்பு நடுங்க ஆரம்பித்து விட்டது. 'நம் வாழ்நாளையே குலைக்கவந்த குழந்தையின் அழுகுரல் போலல்லவா இருக்கிறது?' என எண்ணியவன் 'ஒ'வென்று அழ ஆரம்பித்துவிட்டான். இப்படி ஒரு காட்சி தோன்றும்படி அருணகிரி நாதர் அலங்காரமாகச் சொல்கிறார்.

182