பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/193

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறிஞ்சிக் கிழவன்

புதிய கதை

ந்தப் பாட்டை ஒருவர் பார்த்தார். திருப்பரங்குன்றப் புராணம் எழுதிய புலவர் அவர். நக்கீரர் எழுதியுள்ள திருமுருகாற்றுப் படையையும் படித்தார். அவருக்கு அருணகிரிநாதர் பாட்டு சமத்காரமாகப் படவில்லை. இந்தக் கேள்விக்கு உள்ள படியே பொருள் செய்து கொண்டார் அவர் ஒரு கதையையே தம் புராணத்தில் சொல்லிவிட்டார்.

திருப்பரங்குன்றத்தில் கற்கிமுகி என்ற பூதம், தன்னுடைய குகைக்குள் 999 பேர்களைப் பிடித்து வைத்திருந்தது. இன்னும் ஒரே ஒருவர் வந்தால் போதும்; அந்த ஆயிரம் பேரையும் விழுங்கிவிட எண்ணியிருந்தது. 999 பேர் கிடைத்தும் இன்னும் ஒருவர் கிடைக்கவில்லை. அந்த ஒரே ஒரு பேர்வழியாக நக்கீரர் போய் அகப்பட்டுக் கொண்டார். அவர் உள்ளே போனவுடனே, அங்கே இருந்தவர்கள், "இதுவரையிலும் நாங்கள் குகைக்குள் சுகமாகவாவது சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். நீ வந்து விட்டாயா? உன்னைச் சேர்த்தால் ஆயிரம் பேர்கள் ஆகிவிடுவார்கள். இனி நம்மை அந்தப் பூதம் சாப்பிட்டுவிடும்" என்று அழுதார்கள். நக்கீரர் பார்த்தார். அவர் இருக்கிற இடம் குகை அல்லவா? முருகனுக்குக் குகன் என்ற திருநாமம் உண்டு. இருதயமாகிய குகையில் இருப்பவன் அவன், தகராகாச குகையில் இருப்பதனால்தான் அவனுக்குக் 'குகன்' என்ற பெயர் வந்தது. இருதயமாகிய குகையில் இருக்கிற குகனை, கற்கிமுகி என்னும் பூதம் தம்மை அடைத்து வைத்திருக்கிற குகையிலிருந்து வெளி வருவதற்காக நினைத்தார். திருமுருகாற்றுப் படையை பாடி வேண்டினார். அவருடைய பிரார்த்தனைக்கு இணங்கி முருகப் பெருமான் பூதத்தைச் சங்காரம் செய்து அந்தக் குகையிலிருந்து அவர்களை வெளிப்படுத்தினான்.

அப்போது முருகப்பெருமானுக்கு நக்கீரரிடம் சிறிது கோபம் வந்ததாகச் சொல்கிறார் புராணக்காரர். ஏன் தெரியுமா? என்றும் இளமை உடையவனாய், பல ரூபத்தோடு இருக்கின்ற நம்மை இந்த நக்கீரன் திருமுருகாற்றுப்படையில் "விண்பொரு நெடு வரைக் குறிஞ்சிக்கிழவ" என்று சொல்லியிருக்கிறானே! அதுவும் ஒருமுறை சொன்னானா, மறந்து சொல்லியிருக்கலாம் என்று நினைக்க? இரண்டாம் முறையாகவும், "பழமுதிர்சோலை மலை,

க.சொ.1-13

185