பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/196

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தனிப்பரமானந்தம்

1

புராணச் செய்திகள்

ருணகிரியார் இறைவனுடைய திருவருளில் ஈடுபட்டுக் கந்த புராணத்தின் கருத்தை எல்லாம் நன்கு தெரிந்து கொண்டவர். அவர் காலத்தில் தமிழில் உள்ள கந்த புராணம் தமிழ்நாட்டில் எங்கும் பரவியதோ இல்லையோ தெரியவில்லை. ஸ்காந்த புராணம் என்று சொல்லும் வடமொழிக் கந்த புராணத்தின் கருத்துகளும் கதைகளும் அவர் காலத்திற்கு முன்பிருந்தே இந்த நாட்டில் வழங்கி வந்திருக்கின்றன. திருமுருகாற்றுப்படை, பரிபாடல் முதலிய சங்க நூல்களில் முருகனைப் பற்றிய வரலாறுகள் பல உள்ளன. எல்லாப் புராணங்களையும்விடக் கந்த புராணம் தமிழ்நாட்டில்தான் அதிகமாக வழங்கி வந்திருக்கிறது. வடநாட்டில் கந்த புராணத்தைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது.

தமிழ்நாடும் கடவுளன்பும்

தென்னாட்டில் இருப்பதுபோல ஆலயங்களையோ ஆலய வழிபாடுகளையோ வடநாட்டில் பார்க்க முடியாது. அங்கே மக்கள் கூட்டமாகக் கூடிப் பஜனை செய்வார்கள். சரித்திரக் கண்கொண்டு பார்த்தால், பிறநாட்டவர்களின் அடக்குமுறைக்கும் படையெடுப்புக்கும் வடநாடு அப்போதைக்கப்போது உள்ளாகி வந்திருக்கிறது என்பது தெரியவரும். பிற நாட்டவர்கள் அங்கே அடிக்கடி படையெடுத்து வந்து கலகம் விளைவித்ததால் அமைதி இல்லாமல் போயிற்று. அதனால் அவர்கள் சமயத்துறையில் தென்னாட்டைப்போல அவ்வளவு வளர்ச்சி அடையவில்லை. அவர்களுக்குப் பக்தி இல்லை என்பது அல்ல. அவர்கள் பக்தி செய்த முறை வேறு. தமிழ்நாட்டில் அமைதி நிலவியதால் பல பல