பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/197

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தனிப்பரமானந்தம்

ஆலயங்கள் எழும்பின. ஆலயங்களில் மூர்த்திகளைப் பிரதிஷ்டை செய்தார்கள். பூசை நியமங்கள் ஏற்பட்டன. அங்கங்கே உள்ள கோயில்களில் எழுந்தருளியிருக்கும் மூர்த்திகளுக்குப் பெரிய பெரிய விழாக்கள் நிகழலாயின.

தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு தலத்துக்கும் புராணம் இருக்கிறது. மதுரைக்கே ஐந்து புராணங்கள் இருக்கின்றன. அவற்றில் பரஞ்சோதி முனிவர் இயற்றியுள்ள திருவிளையாடற் புராணம் காப்பிய வகையில் மிக உயர்ந்ததாக அமைந்திருக்கிறது.

பழங் காலம்

ச்சியப்ப சிவாசாரியார் காலத்திற்கு முன்பே, அதாவது தமிழில் கந்த புராணம் ஏற்படுவதற்கு முன்பே, வட மொழியிலுள்ள கந்தபுராணத்தின் வரலாறுகளும், தத்துவங்களும் இந்த நாட்டில் உலவி வந்திருக்கின்றன என்று சொன்னேன். அவற்றைக் கற்றுணர்ந்த பெரியோர்கள் இந்த நாட்டில் இருந்தார்கள். சங்க கால இலக்கியமான பரிபாடலில் ஒரு பாட்டு இருக்கிறது. முருகனைப் பற்றிக் கடுவன் இள எயினனார் என்னும் புலவர் பாடிய பாடல் அது. "மலைச்சாரலில் வாழும் பூசாரி உனக்குப் பூசை போடுகிறான். தாமரையில் நீ அவதாரம் செய்தாய் என்கிறான். உலகத்தைச் சங்காரம் செய்கின்ற சங்கரனுடைய பிள்ளை நீ என்று சொல்கிறான். நீ யாருக்கும் பிள்ளை அல்ல. நீ எங்கும் பிறந்தவனும் அல்ல. ஆகவே அவன் சொல்வது மெய் அன்று. ஆனால் அவன் சொல்வதைக் கேட்டு நீ மகிழ்ச்சி பெற்று அவனுக்கு அருள் செய்கிறாய். அவன் சொல்கிற வார்த்தைகளைக் கேட்டு நீ எழுந்தருளி அருள் செய்வதனால் அவன் சொல்வன பொய்யும் அல்ல. உன் அவதாரம் பல வகைப்படும். அதைக் கொண்டு நின் இயல்பை அளந்தறிய வொண்ணாது" என்று பல செய்திகளை அவர் சொல்கிறார். அப்படிப் பல காலமாக இந்த நாட்டில் வழங்கி வருகிற கருத்துக்களை அருணகிரியார் நன்கு தெரிந்து கொண்டிருந்தார்.

தொகுத்து அறிதல்

னிதன் ஒன்றைப் பற்றி ஆராய்ச்சி செய்தால் அதைப் பற்றிய பல செய்திகளையும் தொகுத்து அறிந்து கொள்வான்.

189