பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/199

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தனிப்பரமானந்தம்

பருவம் எது? காளைப் பருவம் அல்லது குமரப் பருவம் அல்லவா? அடுத்தபடி அது நினைப்புக்கு வந்தது. அவனைக் காளையாக, குமரனாக இந்தப் பாட்டிலே பாடுகிறார். காளைக்குக் கன்னி வேண்டும் அல்லவா? இந்தப் பாட்டிலே குமரனாகிய முருகன் ஒரு கன்னிகையைக் காதலித்த திருவிளையாடலைச் சொல்கிறார்.

வள்ளித் திருமணம்

பெரும்பைம் புனத்தினுட் சிற்றேனல்
காக்கின்ற பேதைகொங்கை
விரும்பும் குமரனை

என்று தொடங்குகிறது பாட்டு. அவன் எத்தகையவன்? அவன் யாரை விரும்பினான்? அவன் குமரன். பெரும்பைம்புனத்தினுட் சிற்றேனல் காக்கின்ற பேதையை விரும்பிச் சென்றான். இந்த வரலாற்றை கவனிக்கும்போது கந்த புராணத்தில் கடைசிப் பகுதிக்கு வந்துவிடுகிறோம். கந்த புராணம் முருகனது திரு அவதாரத்தில் தொடங்குகிறது. அதனைச் சென்ற பாட்டிலே அருணகிரியார் சொன்னார். அது முக்கியமான பகுதிதான். ஆனாலும் அது ஒன்று தான் முக்கியமான பகுதி என்று சொல்வதற்கில்லை. சூரபன்மனை ஆண்டவன் சங்காரம் செய்த வரலாறு கந்த புராணத்தில் பெரும்பகுதியில் விரவிக் கிடக்கிறது. சூரனும், அவனுடைய தோழர்களும் ஆண்டவனிடம் பல பல மாயங்களைப் புரிய எம்பெருமான் அவற்றைப் போக்கி அவர்களைச் சங்காரம் செய்த வரலாறு விரிவாக இருக்கிறது. அந்தப் பகுதிகளும் நமக்கு முக்கியமானவையே.

ஒரு மாமரம் அடி பருத்து நன்றாக வளர்ந்திருக்கிறது; கப்பும் கிளையுமாகப் படர்ந்திருக்கிறது. அந்த மரத்தின் பெரும்பகுதி கிளைகளும், இலைகளுமாகத்தான் இருக்கிறது. ஆனால் ஒருவன் கிளைகளையும், இலைகளையுமா பார்த்துக் கொண்டிருக்கிறான். அந்தக் கிளைகளோடு மரத்தின் பயன் நின்று விடவில்லை. கப்புக்கும் கிளைகளுக்கும் நடுவிலே உச்சியில் இருக்கும் பழந்தான் அதன் பயன். அந்த மரத்தின் உச்சியிலே எந்த இடத்தில் பழம் இருக்கிறது என்றுதான் நாம் எல்லோரும் பார்ப்போம். அந்தப் பழம் கனிந்திருக்கும்; இன்பச்சுவை உடையதாய் இருக்கும். அவ்வாறே கந்த புராணம் முழுமையும் விரிந்து வளர்ந்து கிடப்பது

191