பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/208

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

ஒடி வந்தான்

ள்ளிக்கு வாழ்வளிக்க முருகன் எப்போது வந்தான்? அந்தக் குற மாது தங்களுடைய குல தெய்வமாகிய முருகனைக் கொஞ்சம் நினைத்தாள். நினைத்த மாத்திரத்திலே ஓடி வந்து விட்டான், அவளுக்கு வாழ்வு அளிக்க. வள்ளியாகிய ஆன்மா தன்னை நினைக்கவில்லையே என்று அவன் காத்துக் கொண்டிருக்கிறான். தன்னை மெல்ல நினைத்தாலும் உடனே வேகமாக ஓடி வந்து அருள் செய்கிறவன் முருகன். வரவேற்புப் பத்திரம் வாசித்தளித்தால் வருவேன், மாலை போட்டுப் போட்டோ எடுப்பதாயிருந்தால்தான் வருவேன் என்று அவன் பிகு பண்ணிக் கொள்ள மாட்டான். பருவம் அறிந்து ஓடி வந்து இன்பம் அளிப்பவன் அவன்.

வள்ளி அவனை அடைவதற்குரிய பருவத்தை அடைந்து விட்டாள். அவள் பருவம் அடைந்துவிட்டாள் என்பதைப் பாட்டில் வருகிற சொல்லே குறிக்கிறது.

பேதை கொங்கை விரும்பும் குமரனை

பருவம் வந்தவுடனே ஆண்டவன் ஒடி வந்தான். அவளிடம் தான் இன்பத்தை அடைய விரும்பி வந்தவனைப் போல ஒடி வந்தான். இதுதான் பெரியவர்களுடைய தன்மை. யாருக்காவது அவர்கள் உபகாரம் செய்ய நினைத்தால் ஏதாவது சிறு வேலையை அவர்களுக்குக் கொடுத்துவிட்டு, அந்த வேலைக்கு ஈடு செய்வது போலப் பன்மடங்கு உபகாரம் செய்வார்கள். முருகனும் அப்படியே செய்தான். வள்ளிக்கு வாழ்வு அளிக்க விரும்பினான். ஆனால் அவளிடம் இருந்து தான் இன்பம் அடைய விரும்புகிறவனைப் போல ஒடி வந்தான். தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படியாக அவளிடம் கெஞ்சிக் கூத்தாடினான்.

அவனுக்கு மணம் ஆகவில்லையா? தேவர்களுக்கெல்லாம் அரசனான இந்திரனுடைய பெண் தேவயானையை ஐராவதம் சுமந்து வர, தேவர்கள் யாவரும் அந்த அழகான பெண்ணை மணந்து கொள்ள வேண்டுமென்று முருகப் பெருமானைக் கெஞ்சிக் கேட்டு மணம் செய்து கொடுத்தார்கள். அந்தப் பெருமாட்டியின் அழகு வாடவில்லை; அவள் கிழவியாகப் போய்விடவில்லை, இவன் இன்னொரு மனைவியை நாடி ஒட எந்தச் சமயத்திலும்

200