பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/217

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தனிப்பரமானந்தம்

கிறார்கள். இப்பொழுதோ, இன்னும் சற்று நேரத்திலோ போய் விடும்" என்று சொல்கிறார்கள். பாலிலே ஆரம்பித்த வாழ்க்கை, பாலிலேயே முடிகிறது. இறக்கும் அளவும் அவனை அடிமையாக்கி வைத்திருப்பது நாக்காகிய பொறி ஒன்றுதான். நாக்கின் சுவைக்கு நாம் அடிமைப்பட்டிருப்பதாலேயே, மற்றப் பொறிகளால் நுகரும் இன்பத்தைத் தரும் பொருள்களையும் தேன் என்றும், பால் என்றும், கரும்பு என்றும் சொல்கிறோம்.

அருணகிரியார், "சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை விரும்பும் குமரனை மெய்யன்பினாலே மெல்ல மெல்ல உள்ளுவ தனால் அரும்புகின்ற தனிப் பரமானந்தத்தைச் சுவைத்தவர்களுக்குக் கரும்பும் துவர்த்துப் போகும்; செந்தேனும் புளித்துப் போய்ப் பிறகு கசந்தே போகும்" என்கிறார். கரும்பையும், தேனையும் சுவைப்பது நாக்கு. துவர்த்துப் போன கரும்பை நாக்கு விரும்புமா? புளித்துப் போன தேனை விரும்புமா? விரும்பாது, கரும்பும் தேனும் நாக்கினால் அடைகின்ற இன்பத்தைக் குறிப்பதானாலும் பொறிகளினால் அடைகின்ற இன்பம் அனைத்துக்கும் இவை இரண்டும் அடையாளம். முருகனைத் தியானித்து வரும் ஆனந்தத்தைச் சுவைத்த பிறகு உலக இன்பம் அனைத்தும் சுவையற்றனவாகிவிட்டன; வெறுப்பை அளிப்பவை ஆகிவிட்டனவாம்.

ஒரு விருந்து சாப்பிடப் போகிறோம். ஜிலேபி போடுகிறார்கள். அதை உண்ணுகிறோம். அதற்குப் பிறகு சேமியா பாயசம் கொண்டு வருகிறார்கள். அதனை வேண்டாம் வேண்டாம் எனச் சொல்கிறோம். சேமியா பாயசம் இனிப்புடையது அல்ல என்பதாலா? இல்லை, இல்லை. மிக இனிப்பான ஒன்றை முதலிலே சாப்பிட்ட பிறகு, சாதாரண இனிப்புடைய மற்றொன்றைக் கொடுத்தால் அது சுவைப்பது இல்லை. எல்லோரும் காபியை விரும்பிச் சாப்பிடுகிறார்கள். ஆனால் பாதாம் ஹல்வா சாப்பிட்ட பிறகு காபியைச் சாப்பிட்டால் அது கசக்கிறது. தினமும் சாப்பிடுகிற சாப்பாட்டிலேயே ஒன்று மிக இனிப்பதானால், மற்றொன்று சுவை இழந்து விடும்போது, பேரின்பத்தைத் தித்தித்து அறிந்த பிறகு, சிற்றின்பத்திலே சுவை எப்படி இருக்கும்? "கரும்பும் துவர்த்துச் செந்தேனும் புளித்து அறக் கைத்ததுவே" என்பது உண்மை அநுபவம்.

209