பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/221

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பேய் விளையாட்டு

1

ம்முடைய அநுபவத்தை, "இறைவன் திருவருளால் அவனை மெய்யன்புடன் மெல்ல மெல்ல உள்ளினேன். அதனால் தனிப் பரமானந்தம் அரும்பியது. அதன்பின் உலக இன்பங்கள் வெறுத்துப் போயின" என்று அருணகிரியார் சொன்னார். அப்போது அவர் இறைவனுக்கு அருகில் நின்று பெருமிதத்தோடு பேசினார். அவர் கருணை உடையவராதலினால், அப்படியே இருப்பதில்லை. நம் நிலையிலிருந்து இறைவனுடைய அணிமையை அடைந்தவர் அவர். நம் துன்பநிலை அவருக்கு நன்றாகத் தெரியும். மேலே இருந்தபடி நம்மை பார்க்கிறார். 'இவர்களை மறக்கக் கூடாது' என்ற அருள் உள்ளத்தால் மறுபடியும் நம்மிடம் ஓடி வருகிறார். நம்மோடு ஒருவராக நின்று முருகனிடம் விண்ணப்பம் செய்து கொள்கிறார். நமக்காகவே அப்படிச் செய்கிறார். தாம் ஏதோ மயக்கம் அடைந்தது போலவும், அதைப் போக்கி அருள் செய்ய வேண்டும் என்பதற்காகவும் அவர் பாடுகிறார்.

சளத்தில் பிணிபட்டு அசட்டுக் கிரியைக்குள்
தவிக்கும்என்றன்
உளத்திற் ப்ரமத்தைத் தவிர்ப்பாய்; அவுணர்
உரத்துதிரக்
குளத்திற் குதித்துக் குளித்துக் களித்துக்
குடித்துவெற்றிக்
களத்தில் செருக்கிக் கழுதாட வேல்தொட்ட
காவலனே.

மயக்கம்

“என் உள்ளத்தில் உள்ள ப்ரமத்தைத் தவிர்க்க வேண்டும்" என்பது அவர் வேண்டுகோள். ப்ரமம் என்பது மயக்கம்.