பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/254

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

முதல் பாட்டு அவர் வியப்பிலே மூழ்கிப் பாடியது. "பிரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழிவிட்டவாறு என்னே!" என்பதில் வியப்பு இருக்கிறதல்லவா? இப்போது முகமாறுடைத் தேசிகன் விளம்பிய உபதேசத்தை நினைந்து வியப்படைகிறார்.

தேசிகன்

தேசிகன் என்பது குருவைக் குறிக்கும் சொல். இன்ப அநுபவத்தைப் பெறும்படி உபதேசம் செய்த தேசிகன் முருகன். உலகத்திலுள்ள மக்களுக்கு நல்ல குணம் படைத்த மக்கள் குருக்களாக இருக்கிறார்கள். அந்தப் பெரியார்களுக்கு உலகப் பற்றுகளை எல்லாம் ஒழித்துவிட்டு, இந்திரிய நிக்கிரகம் செய்த துறவிகள் குருக்கள். இந்தத் துறவிகளுக்குப் பழங்காலம் முதற் கொண்டே ஒரு குரு பரம்பரை இருந்து வருகிறது. அந்தப் பரம்பரையில் பழையவர்கள் சனகர் முதலிய நான்கு பேர்கள். இந்த நான்கு பேர்களுக்கும் குருநாதர் இன்னாரென்று யாவரும் அறிவர்; அவரே தட்சிணாமூர்த்தி.

ஒவ்வொரு கோயிலிலும் தெற்கு நோக்கி வீற்றிருக்கிற பெருமான் தட்சிணாமூர்த்தி. அவரைக் குருமூர்த்தி என்று சொல்வார்கள். குரு பரம்பரை அவரோடு நின்றுவிடவில்லை. அவருக்கும் மேலே போகிறது. சிறந்த குருவாய் இருக்கிற தட்சிணாமூர்த்தியும் ஒரு சமயத்தில் மாணவராக இருந்தார். மற்றவர்களை நோக்க எல்லோருக்கும் பரம குருவாய் இருக்கின்ற தட்சிணாமூர்த்தி வேறு ஒருவனை நோக்க மாணவராக இருந்தார். அவன்தான் குமரகுருபரன். குருமூர்த்திகளுக்குள் உயர்ந்தவன் ஆதலாலே குருபரன் என்ற பெயர் பெற்றான். குமரன் ஆகையினாலே அவனைக் குமரகுருபரன் என்று வழங்குவார்கள்.

சிவபெருமானுக்குப் பிரணவப் பொருளை உபதேசம் செய்கின்றபோது முருகன் குருவாய் இருந்தான். சிவபெருமானுக்கே குருவாய் இருந்த நல்ல புகழ் உடையவன் என்றால், அவன் ஆத்துமாக்களுக்கு நல்லுபதேசம் செய்வான் என்று சொல்லவும் வேண்டுமா? தமக்கு அவன் உபதேசம் செய்ததனாலே தாம் அடைந்த இன்ப அநுபவங்கள் என்ன என்பதை இந்தப் பாட்டில் பேசுகின்றார்.

246