பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/266

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

எலும்பையும் உள்ளே நெகிழும்படி செய்து இனிக்கிறதாம். அதைச் சொரியும் நடனத்தையுடையவனாம் இறைவன். நடராசன் எப்போதும் சுற்றிச் சுழன்று ஆடிக் கொண்டே இருக்கிறான். அதனால் அவன் பாத தாமரை எப்போதும் அசைந்தபடியே இருக்கிறது. அதிலிருந்து அனந்தத் தேன் நாலு பக்கமும் சிதறித் துளிக்கிறது. அவன் எப்போதும் தூக்கிய பாதம் உடையவன். அதை குஞ்சித பாதம் என்று சொல்வார்கள். அந்தக் குஞ்சித பாத தாமரையிலிருந்து தெறிப்பது அந்தத் தேன். அதைச் சுவைக்கின்ற ஆன்மாக்களின் உடம்பிலுள்ள மிக வலியதான எலும்புங்கூட நெகிழ்ந்து இன்மையை உணரும் என்று சொல்கிறார். மனத்தையே வண்டாக வைத்துப் பாடிய பாட்டு இது.

இந்த ஆனந்தத் தேனையே அருணகிரியார் சொல்கிறார். "இறைவன் அருளினாலே அந்தத் தேன் எனக்குக் கிடைத்தது" என்று தெரிவிக்கிறார். "அது எனக்கு முன்னாலே கிடைக்காமல் இருந்தது. கிடைக்கும்படியாக விளம்பியவன் முருகன்" என்கிறார்.

"அந்தத் தேன் எங்கே இருந்தது? மலைமேலே இருந்தது. என்னைச் சுற்றிலும் இருட்டுச் சூழ்ந்திருந்ததால் முதலில் எனக்கு என்னைச்சுற்றியுள்ள பொருள்கள் இன்னவை என்றே தெரியவில்லை. வீடும் தெரியவில்லை. வீதியும் தெரியவில்லை. பள்ளமும் தெரியவில்லை. மேடான மலையும் தோன்றவில்லை. ஒளியாகிய அவன் கருணை கிடைத்த பிறகுதான் எல்லாப் பொருள்களும் தெரிந்தன. அவ்வப் பொருளின் இயற்கை நிறம் தெரிந்தது; உருவம் தெரிந்தது. கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருண்டு விட்டது என்று பூனை நினைக்கும் என்று சொல்வார்கள். அதைப் போல நான் என் உள்ளத்திலுள்ள மயக்கத்தினால் சளத்தில் பிணிபட்டு அசட்டுக் கிரியைகள் செய்து கொண்டுதான் இருந்தேன். என் உள்ளத்தின் மயக்கம் கெட அவன் மெய்ப்பொருள் பேசினான். அவன் அருள் கிடைத்த மாத்திரத்திலே உலகிலுள்ள யாவும் தெரிந்தன. மலை தெரிந்தது. அதன் மேலே ஏறினேன். அங்கே மரத்தில் உள்ள ஆனந்தத் தேன் கிடைத்தது” என்று அறிவிக்கிறார்.

இருளும் ஒளியும்

ருட்டிலே பார்க்கும்போது உலகிலுள்ள பொருள்களின் உருவம் நிறம் முதலியன எப்படி நமக்குத் தெரியவில்லையோ,

258