பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/273

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆனந்தத் தேன்

அம்மாவை விட்டு ஒருகணங்கூடப் பிரிந்து இருக்க மாட்டாள். அப்பாவுக்குச் செல்லப் பெண். இருந்தாலும் கல்யாணம் ஆகிக் கணவன் வீட்டுக்குப் போன பிறகு ஒரு பத்து நாள் வருகிறாள் என்று வைத்துக் கொண்டாலும், அந்தப் பத்து நாளைக்குப் பல தடவை தன் வீட்டுக்குப் போக வேண்டுமென்று சொல்லி விடுகிறாள். "இதுதான் அம்மா உன் வீடு. நீ தவழ்ந்து ஆடி விளையாடிய கூடம் இதோ இருக்கிறது பார். நீ வைத்த வாழை எப்படி வளர்ந்திருக்கிறது பார்" என்று அவள் தாய் சொன்னாலும் அவள் அவை எல்லாவற்றையும் விட்டுத் தன் வீட்டுக்குப் போக வேண்டுமென்கிறாள். தன் வீடு என்று எதைச் சொல்கிறாள்? நாயகனோடு இருக்கும் இடத்தைச் சொல்கிறாள். பிறந்த வீட்டை அவள் தன் வீடு என்பதே இல்லை. கல்யாணம் ஏதோ ஒரு நாள் நடக்கிறது. கல்யாணம் ஆகிற வரைக்கும் இருபது இருபத்திரண்டு ஆண்டுகள் அவள் தாய் தந்தையர்களின் வீட்டிலே இருந்திருக்கிறாள். ஆனால் அந்த ஒரு நாள் கல்யாணம் ஆன பின், அந்த வீட்டை அவள் தன் வீடு என்று சொல்லமாட்டேன் என்கிறாள். அதே மாதிரியாக உள்ளத்தில் மயக்கம் இருக்கிறவரையில் நாம் இப்பொழுது இருக்கிற வாழ்க்கையே மிக உயர்ந்ததாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். நாம் இருக்கிற வீடுதான் நமது வீடு என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அறிவு மலையிலே ஏறி மாயை நீங்கிவிட்டால் அப்போது இந்த உலகத்திலே இந்திரியங்களின் வாயிலாக அநுபவிக்கும் இன்பங்களை எல்லாம் வெறுக்கத் தலைபட்டுவிடுகிறோம். அறிவின் துணைக் கொண்டு, உண்மைப் பொருளை அறிந்துவிட்டால், அப்புறம் அங்கே அறிவுக்கு வேலை இல்லை. அறிவு அதோடு நின்று விடுகின்றது. உள்ளத்தில் அன்பு விளைந்தால் அந்த நிலையிலேயே இன்ப அநுபவம் உண்டாகிறது. வெறும் அறிவை மாத்திரம் வைத்துக் கொண்டு பயன் இல்லை. ஆண்டவனுடன் கலந்து ஆனந்தத்தைச் சுவைப்பதற்குத் துணையாக இருப்பது அன்புதான்.

அறிவு நழுவுதல்

சங்கராசாரிய சுவாமிகள் தம் அறிவின் துணை கொண்டு பல பல இடங்களுக்கும் சென்று பல பேரோடு வாதாடி அத்துவைதக் கொள்கையை நிலைநாட்டினார். பிற சமயவாதிகளை எல்லாம்

க.சொ.1-18

265