பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/305

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சும்மா இருக்கும் எல்லை

"என்னுடைய ஆற்றலால் நான் எதுவும் செய்யவில்லை. இறைவன் தன்னுடைய அருள் ஆற்றலால் என்னை அந்த எல்லைக்குள் விட்டான். நான் என்னையே இழந்துவிட்டதால் என்னுடைய முயற்சியின் பயனாக அங்கே போகவில்லை. எல்லாம் அற, என்னை இழந்த நலம் விளைவித்தவனாகிய முருகனே அந்த எல்லைக்குள் என்னைச் செலுத்தினான். அவனது அருள் வல்லமை இருக்கிறதே, அதுவே என்னைச் செல்ல விட்டது" என்கிறார்.

அவன் எத்தகையவன்? இகல் வேலன்; பகைவரோடு மாறுபட்டு எதிர்த்து வெல்லும் வேலைக் கையில் உடையவன்.

இறைவன் திருவருளினால் தாம் பெற்ற இன்ப அநுபவத்தை எடுத்துச் சொல்லும்போதெல்லாம் வள்ளியம்பெருமாட்டிக்கு கிடைத்த இன்பத்தையும் நினைப்பூட்டுவது அவர் வழக்கம். இதற்கு முன்பு பாட்டிலே அதைப் பார்த்தோம். உள்ளத்தில் அரும்பும் தனிப் பரமானந்தத்தைச் சொல்ல வந்தவர், "பெரும் பைம் புனத்தினுட் சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை விரும்பும் குமரன்” என்று பேசினார். அப்படிச் சொல்லும்போது, 'வள்ளி கல்யாணம் என்பது சிற்றின்பக் காதல் அல்ல; பேரின்பக் காதல்; ஆண்டவன் வள்ளியம்பெருமாட்டியைத் தானே வலிய வந்து ஆட்கொண்டு அருள் வெள்ளத்தைப் பாய்ச்சினான்' என்பதையும் புலப்படுத்துகிறார். வள்ளி மணவாளப் பெருமாள் சிற்றின்பத்திற்கு நாயகன் அல்ல, அவன் பேரின்ப அநுபவம் தந்தவன் என்ற குறிப்புத் தோன்றப் பல இடங்களில் கூறுகிறார். இந்தப் பாட்டிலும் வள்ளியைப் பற்றிப் பேசுகிறார்.

வள்ளியின் மொழி

நல்ல கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியை.

கொல்லி என்பதற்கு இரண்டு பொருள் உண்டு. ஆளைக் கொல்கின்ற நஞ்சுக்குக் கொல்லி என்று பெயர். மற்றொன்று ஒருவித ராகம்; பண். கொல்லி என்பதற்கு நஞ்சு என்ற பொருள் வரக்கூடாது என்பதற்காகவே, "நல்ல கொல்லி' என்கிறார். நல்ல கொல்லிப் பண் எனப் பொருள் கொள்ள வேண்டும். காதுக்கு நல்லதாக, இனிமை தருவதாக இருக்கிற கொல்லிப்

க.சொ.1-20

297