பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/344

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

ஞானம் பெற்ற ஆன்மாக்களுக்கு இறைவன் மயமாக இருக்கும். அப்பொழுது பிரபஞ்சம் என்பதன் எல்லை உடை பட்டுப் போகும்; பிரபஞ்சமே இல்லையாகும். அண்ட கடாகம் உடைபட்டது என்பது அதையே குறிக்கிறது.

இறைவன் திருவருள் அநுபவம் உண்டாவதற்கு முன்னாலே மனப் பக்குவமடைந்து வருகின்றது என்பதற்கான அடையாளங்களாக இவை இருக்கின்றன. இறைவன் திருக்கரத்திலுள்ள கோழி சிறகை அடித்துக் கொண்டாலோ போதும்; பிறவிக் கடல் கிழிந்து போய்விடும்; இனி வருகின்ற பிறவிகள் இல்லை. அது மாத்திரமா? எடுத்த பிறவியிலும் பிரபஞ்ச திருஷ்டி போய்விடும். அதற்கப்பால் என்ன நிகழும்?

தேவலோக இன்பம்

உதிர்ந்தது உடுபடலம்

டு என்பது நட்சத்திரம். படலம்-பரப்பு. நட்சத்திரப் பரப்பு முழுவதும் உதிர்ந்ததாம். வரப்போகின்ற பிறவிகள் எல்லாம் கிழிந்துவிட்டன; இந்தப் பிறவியிலும் பிரபஞ்ச வாசனை உடைபட்டுப் போய்விட்டது என்ற கருத்தை முன் நிகழ்ச்சிகள் காட்டின. மேலே இருக்கிற நட்சத்திரப் படலங்கள் உதிர்ந்தன என்பதன் மூலம், தேவலோக வாழ்க்கையாகிய சொர்க்க இன்பம் இந்தப் பிறவியில் நான் செய்கின்ற புண்ணியங்களின் விளைவாக ஏற்படும் என்ற ஆசையும் உதிர்ந்தது என்னும் கருத்துக் குறிப்பாகப் பெறப்படும். புண்ணியம் செய்வதனாலே தேவலோகம் கிடைக்கும் எனச் சாதாரண மக்கள் அதனை விரும்பலாம். ஞானிகளுக்கு அதனால் ஒன்றும் பயன் இல்லை. அந்த நிலையையும் விட மேலான ஒரு நிலை இருக்கிறது. அதுவே வீடு.

"வானோர்க்கு உயர்ந்த உலகம்"

என்று இதனை வள்ளுவர் சொல்கிறார். உண்மையான அருள் இன்பம் பெற்ற ஜீவன் முக்தர்களுக்குக் கிடைக்கின்ற நிலை இது. ஆகவே ஞானிகளுக்குத் தேவலோகத்தினால் பயன் இல்லை. உதிர்ந்தது உடுபடலம் என்பது; இந்தத் தேவலோக இன்பங்களும் பயனின்றி உதிர்ந்தன என்பதை உணர்த்துகிறது.

338