பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

கொண்டாலும் காது திறந்து இருக்கிறது; உடம்பில் பரிச உணர்ச்சி இருக்கிறது; மற்றப் புலன்களும் உணர்வுடையனவாக இருக்கின்றன. கனவிலே எல்லாம் அடைத்துப் போகின்றன. அது சொப்பனாவஸ்தை. நனவில் காது முதலியவை அடைத்துப் போகும்படியான நிலை வந்தால் தியானம் பண்ணும் பொருள் தெளிவாகத் தெரியும்; பொறிகள் அடங்கி நிற்க, உள்ளே கனவிலே தெளிவாகக் காண்பதுபோல ஒன்றைக் காண முடியும்; அதை ஜாக்கிரத்தில் சொப்பனம் என்று சொல்லுவார்கள்.

ஜாக்கிரத்திலும் கண்ணை மூடிக்கொள்ளும் போது முழு உருவம் நமக்குத் தோன்ற வேண்டுமானால், முதலில் இந்த உடம்பினுள் உள்ள ஜன்னல்களை எல்லாம் அடைக்கப் பழக வேண்டும். உடலில் உள்ள புறக் கதவுகளை எல்லாம் அடைப்பதற்கு மனத்தில் சத்துவகுணம் அதிகப்பட வேண்டும்.

கோயிலுக்குப் போகிறோம். ஆண்டவன் அலங்காரத்தைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொண்டு வந்து விடுவது போதாது. சில நல்ல பக்தர்கள் கண்ணை மூடிக் கொள்வார்கள். வெளியிலே நன்றாக அலங்காரம் பண்ணி வைத்திருக்கின்ற கடவுளைப் பார்க்காமல் எதற்காக அவர்கள் கண்ணை மூடிக் கொள்ளுகிறார்கள் என்று நமக்குத் தோன்றும். இறைவனைப் புறக்கண்ணால் பார்த்தவுடன் அவனுடைய அழகிய திருவுருவத்தை உடனே உள்ளே பார்க்க வேண்டும்; கண்ணை மூடிக் கொண்டு உள்ளே பார்க்க வேண்டும். பிறகு வீட்டுக்குப் போய்த் தியானம் பண்ண வேண்டும். எதற்காகக் கர்ப்பூர தீபாராதனை செய்ய வேண்டும்? கர்ப்பூரம் கொஞ்சம் கொஞ்சமாக எரிந்து அதன் ஜ்வாலை தணிகிறது. இறைவன் திருவுருவத்தை அந்த ஒளியில் பார்த்துப் பார்த்து, கர்ப்பூர ஒளி மங்கிய பின் அந்த ஒளியை மனத்தில் கொண்டு இறைவனைக் காண வேண்டும். இதற்காகத்தான் கர்ப்பூர தீபம் காட்டுகிறார்கள். அந்தத் திருவுருவம் மனத்திலே பதியச் சிறிது நேரம் ஆகும். கர்ப்பூரம் மெல்ல மெல்ல எரிந்து குறையும். அப்போது மனத்துக்குள் அவ்வுருவத்தைப் பார்த்துப் பழக வேண்டும்.

தினந்தோறும் தியானம் பண்ணிப் பண்ணித்தான் இறைவனுடைய உருவம் நமது உள்ளத்திலே பதியும். அப்படிப் பதி

26