பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/355

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிங்கிணி ஓசை

அந்த வெற்பு ஒவ்வொன்றிலும் சூரபன்மனுடைய ஆட்கள் இருந்தார்கள். சுரர்கள் வாழும் ஆலயமாக இருந்த மேரு இப்போது அசுராலயமாயிற்று. ஆட்சியை மேற்கொள்கிறவன் முக்கியமான நகரங்களையும் கோட்டைகளையும் கைப்பற்றிக் கொண்டு, அங்கங்கே நம்பிக்கையுள்ள அதிகாரிகளை வைப்பது வழக்கந்தானே? சூரனும் அப்படியே செய்தான். எங்கே பார்த்தாலும் தன்னுடைய தளபதிகளையே வைத்தான்.

முருகன் முன் அறிவிப்பு இல்லாமல் தண்டிக்கிறவன் அல்ல. 'நம் அழுகையைக் கேட்டுத் திருந்தாத அசுரர்கள் இந்த ஒலியைக் கேட்டாவது தம் கொடிய செயலிலிருந்து நீங்கட்டும்’ என்பது அவன் திருவுள்ளம். அதனால் அசுரர்கள் இருக்கும் இடங்களுக்கெல்லாம் பரவித் தன் கிண்கிணியோசை கேட்கும்படி செய்தான்.

இந்த ஒலி அவர்களை நடுங்கச் செய்தது. அவர்கள் வாழும் இடங்களை அதிரச் செய்தது. அவர்கள் அதைக் கேட்டுத் திருந்தினார்களா? அதுதான் இல்லை. சில நேரம் அந்த அச்சம் இருந்தது. பிறகு பழையபடி தம்முடைய காரியங்களை மேற்கொண்டார்கள்.

வைராக்கிய வகை

நாமும் இந்த நிலையில்தான் இருக்கிறோம். 'இந்த உலகம் நிலையாது; வாழ்க்கை நிலையாது; நாமும் ஒருநாள் இறந்து படுவோம்; காலன் வந்து நம்மைக் கட்டி இழுத்துப் போவான்' என்ற நினைவு நமக்கு உண்டாகும்படியான நிகழ்ச்சிகள் நடக்கின்றன. யாரேனும் இறந்தால் இந்த நினைவு எழுகிறது; அச்சம் உண்டாகிறது.

யாரேனும் பெரியவர் உலகத்தின் உண்மையை எடுத்துச் சொல்லிச் சொற்பொழிவு ஆற்றும்போது நமக்கு நினைவு உண்டாகிறது; அஞ்சுகிறோம். 'இனி, போகிற வழிக்குப் புண்ணியம் தேடவேண்டும்' என்ற எண்ணங்கூட உண்டாகிறது. ஆனால் அது சில நிமிஷங்களிலே மறைந்து விடுகிறது.

இந்த இரண்டுவிதமான நிகழ்ச்சிகளிலும் உண்டாகிற உணர்ச்சியை ஸ்மசான வைராக்கியம், புராண வைராக்கியம் என்று சொல்லுவார்கள். இந்த வரிசையில் மற்றொன்றும் உண்டு. அதைப் பிரசவ வைராக்கியம் என்று சொல்லுவார்கள். குழந்தையைப்

349