பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அருணகிரியார் செய்த அலங்காரம்

நாக்கிலே நீர் சுரக்கும். அது போலத்தான் இறைவனுடைய திருவுருவத்தைத் தரிசிக்கும் முன் பலவகையான அலங்காரங்களைக் கண்டு மனம் ஈடுபட்டுச் செல்கிறது.

இப்படிப் புலன்களின் வழியே நின்று இன்பத்தைச் சுவைக்கின்ற மனிதர்களுடைய உள்ளங்களைக் கவர்வதற்காக இறைவன் சப்பரத்திலே வருகிறான்; தேரிலே வருகிறான். யானையின் மேல் வருகிறான்; சிங்கத்திலே வருகிறான்; ஆண்டவனுக்கு அலங்காரம் செய்வது எதற்கு? நம் கண்ணை இழுப்பதற்கு. ஆண்டவனுக்கு அதனால் லாபம் ஒன்றும் இல்லை. பிறந்த குழந்தையின் காலுக்குக் காப்புப் போடுகிறோம். காது குத்தி ஜிமிக்கி போடுகிறோம். காதைக் குத்தும்போது வலி பொறுக்க மாட்டாமல் அது வீரிட்டு அலறுகிறது. குழந்தைக்காக அலங்காரம் என்றால், "எனக்கு அலங்காரமே வேண்டாம்" என்று அந்தக் குழந்தை அலறுகிறதே! உண்மையில் குழந்தைக்கு அலங்காரம் பண்ணி நாம் பார்க்க வேண்டுமென்று ஆசைப்படுகிறோம். அந்தக் குழந்தையின் காலுக்கு அலங்காரம் செய்கிறோம். அதன் காலுக்காக அல்ல; நம் கண்ணுக்காகத்தான். ஆண்டவனுக்கு அற்புதமாகச் சிங்காரம் பண்ணுவதும் அவனுக்காகப் பண்ணும் சிங்காரமல்ல. நமது கண் அவனருகே கவிய வேண்டுமென்பதற்காகப் பண்ணும் சிங்காரம் அது. பாலோடு பொங்கல் பண்ணி நைவேதனம் செய்வது அவனுக்காக அன்று. சாமி சாப்பிடாது; ஆசாமி சாப்பிடுவதற்காகத்தான். அந்தச் சாப்பாட்டை நினைத்தாவது அவன் இறைவன் ஆலயத்திற்கு வர வேண்டும் என்பது ஆன்றோர் எண்ணம்.

நாம் அலங்காரம் பண்ணிக் கொள்வது நாமே பார்த்து மகிழ அன்று. பிறர் கண்களில் நாம் நன்றாகப் பட வேண்டும் என்பதற் காகத்தான்.
   "உன்னைச் சிங்காரித்து உன்அழகைப் பாராமல்
   என்னைச் சிங்காரித்து இருந்தேன் பராபரமே"

என்கிறார் தாயுமானவர். "மேலான பொருளுக்கும் மேலான பொருளே, உன்னைச் சிங்காரித்து உன் அழகைப் பாராமல், இந்தப் பாழும் உடம்பைச் சிங்காரித்து வாழ்வை வீணாக்கினேன்" என்கிறார். அவனுக்குச் சிங்காரம் செய்வது அவன்

29