பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடதட கும்பக் களிறு

1

மரபு

ருவர் ஒரு காரியத்தைச் செய்வதற்குப் பல வழிகளிலே முயன்று கடைசியில் எந்த வழியாக வெற்றி பெற்றாரோ அந்த வழியைப் பின்னால் வருகின்றவர்களுக்கும் சொல்வதைச் சம்பிரதாயமாக வைத்திருக்கிறார்கள். 'கல்' என்றும், 'மண்' என்றும் சிலவற்றுக்குப் பெயர் வைத்திருக்கிறார்கள். "இதற்கு கல் என்று பெயர் வைப்பானேன்? இதை மண் என்றும், அதைக் கல் என்றும் ஏன் சொல்லக்கூடாது?" என்று கேட்கலாம். அப்படியும் சொல்லலாம். ஆனால், கல்லைக் கல் என்று சொல்கிறவர்கள் எல்லோரும் அதை மண் என்று மாற்றிச் சொல்ல வேண்டுமானால் பல காலம் ஆகும். ஆகவே, முன்னே நம் பெரியோர்கள் எந்த வழியில் சென்றார்களோ அதே வழியில் நாமும் செல்வது நல்லது. அதனை மரபு, சம்பிரதாயம் என்று சொல்வார்கள். அந்தச் சம்பிரதாயப்படி, ஒரு நூலைத் தொடங்க வேண்டுமானால் அந்த நூலின் ஆரம்பத்தில் விநாயகரைத் துதிப்பது வழக்கம். சிவாலயத்துக்குப் போகும்போது முதலில் விநாயகரை வணங்குவது மரபு.

திருவண்ணாமலை ஆலயத்தின் கோபுரம் கிழக்கு நோக்கி இருக்கிறது. அந்தக் கோபுரத்தின் வழியே உள் வாசலுக்குச் சென்றால் அந்த வாசலின் ஒரு பக்கம் விநாயகப் பெருமான் வீற்றிருக்கிறார். மற்றொரு பக்கம் குமாரக் கடவுள் எழுந்தருளியிருக்கிறார்.

அருணகிரி நாதப் பெருமான் திருவண்ணாமலைக்குச் செல்கிறார். நம்மையும் உடன் அழைத்துப் போகிறார். கோபுர வாசலுக்கு வலப்பக்கம் விநாயகர் இருக்கிறார். இடப்பக்கம் முருகப்