பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

இல்லாதவன் நான். சென்ற காலத்தில் தவம் செய்யாவிட்டாலும், இந்தப் பிறவியிலாவது செய்தேனா? அதுவும் இல்லை. முன்னே செய்த தவத்தின் விளைவான பேறும், பின்னே செய்த தவமும் இல்லாத என்னைப் பிரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழிவிட்டவன் அந்த முருகன்" என்று பாடுகிறார்.

மூவகை வினை

நாம் பலவிதமான குற்றங்களைப் புரிந்து, பலவிதமான பாவ அழுக்குகளைச் சேர்த்துக் கொண்டு ஆண்டவன்பால் போகிறோம். அவன் மிக்க கருணையாளன். நம்மிடம் இருக்கும் பாவ அழுக்கு மூட்டைகளையெல்லாம் வாங்கி வைத்துக் கொண்டு, ஒரு வேட்டி, ஒரு துண்டு மாத்திரம் கொடுத்து, "அப்பா, உலகமாகிற ஆற்றுக்குப் போய் இவற்றையெல்லாம் நன்றாக வெளுத்துக் கொண்டு, சுத்தமாக வா" என்று நம்மை அனுப்புகிறான்.

உலகமென்னும் ஆற்றில் அநுபவமாகிற கல்லில் நம் வினைகளைத் துவைத்துத் தூய்மை செய்து கொண்டு அவன்பால் போவதற்குப் பதிலாக, ஆற்றிலுள்ள சேற்றையெல்லாம் பூசிக் கொள்ளுகிறோம். முன்பு இருந்த அழுக்குப் போதாது எனப் பின்னும் அழுக்காக்கிக் கொள்ளுகிறோம். உயிரிலே ஏறியிருக்கிற வினையாகிய அழுக்கை உலகமாகிற ஆற்றிலே போட்டுக் கழுவுவதற்குப் பதிலாக, வினைச் சேற்றைப் பின்னும் பூசிக் கொள்ளுகிறோம். இப்படி மூன்று விதமான சேறு, அழுக்கு நம்மேல் ஏறியிருக்கின்றன. புண்ணியம், பாவம் என்ற இரண்டுமே பிறப்புக்குக் காரணமாதலின் இரு வினையையும் அழுக்கென்று சொல்ல வேண்டும்.

பலகாலமாகச் சேர்த்து வைத்திருக்கிற அழுக்குக்கு சஞ்சிதம் என்று பெயர். அந்தச் சஞ்சிதம் நம்முடைய பெயர் போட்டு அப்படியே ஆண்டவனிடம் கட்டி வைக்கப்பட்டிருக்கிறது. ஆண்டவன் நம்பாலுள்ள கருணையினால் "அத்தனை அழுக்கு மூட்டைகளையும் வெளுத்து வா" என்று சொல்லாமல், அவற்றையெல்லாம் தன்னிடம் மூட்டை கட்டி வைக்கச் சொல்லிவிட்டு, ஓர் அழுக்கு வேட்டி, ஒரு மேல் துண்டோடு நம்மை

48